×

அரசு பள்ளிகள் பராமரிப்பு, தூய்மைப்பணிகளுக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பதை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ‘அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நியமிக்கும் போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று டெண்டர் குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து இது சம்பந்தமாக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரை எதிர்த்து குவாலிட்டி பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும். 3,000 ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை எதிர்க்க முடியாது எனவும் தெரிவித்த அரசு, தற்போது அதை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்து புதிய டெண்டர் கோர உத்தரவிட்டனர். மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்தவரையே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது சம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.

The post அரசு பள்ளிகள் பராமரிப்பு, தூய்மைப்பணிகளுக்கு தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பதை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : ICORD ,Chennai ,Igord ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?