×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2,288 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: ரூ.5.70 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த ஏப்.4ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 2,288 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை துண்டித்து, சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5,70,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இந்த மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இவற்றை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த குழுவினர் அவ்வப்போது, ஆய்வு நடத்தி, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி தற்போது சென்னையில் நடத்திய ஆய்வில், 2,288 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கடந்த ஏப்.4ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 2,288 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.5,70,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* 4 முக்கிய நீர்நிலைகள்
சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது.

* மழைநீர் தேங்க காரணம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீர் வடிகால் துறையின் மூலம் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சிலர் திருட்டுத்தனமாக கழிவு நீர்குழாய்களை இணைத்து விடுகிறார்கள். இதனால் கழிவுநீர்கள் அடைத்து மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளக்காடாக அந்த பகுதிகள் மாறிவிடுகிறது.

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2,288 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: ரூ.5.70 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...