×

மின்வாரிய அமைச்சர் டிரான்ஸ்பர் விஷயத்துல எம்எல்ஏவை வெளுத்து வாங்கியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மின்வாரியத்துல டிரான்ஸ்பர் வெளிப்படை தன்மையோடு நடப்பதை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக மின்வாரியத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பணிமாறுதல், பதவி உயர்வுக்கு வரும் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது என்பது அமைச்சர் செந்தில்பாலாஜியின் கறார் உத்தரவாம். அலுவலர்களிடம் பணம் வாங்கினால் துறையில் ஊழல் அதிகமாகும். இதனால துறையை சுத்தம் செய்ய வேண்டுமானாலும், அதற்கு அமைச்சர் முன் உதாரணமாக இருக்க வேண்டும்னு நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்லிவிடுகிறாராம். சமீபத்தில் மின்வாரிய இன்ஜினியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாம். அவர்கள் மொத்தமா அமைச்சரை சந்தித்து நன்றி சொன்னாங்களாம். அப்போ, சார், நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும்னு தலையை சொறிந்தார்களாம்.

கடந்த ஆட்சியில் ஒரு ஆளுக்கு 10 எல் வரை வாங்கினாங்க, அதுதான் கேட்கிறோம் என்றார்களாம். யாரிடமும் ஒரு பைசா கூட கொடுக்க தேவையில்லை. நீங்களும் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளையும் அதேபோல நடத்துங்கள் என்று கூறிவிட்டாராம். சமீபத்தில் ஒரு எம்எல்ஏ ஒரு மின்வாரிய பணி மாறுதல் வேண்டும் என்று அமைச்சரை சந்தித்தாராம். அமைச்சரும் பணி மாறுதல் கொடுத்தாராம். பின்னர் பணிமாறுதல் பெற்றவரிடம் சென்று எம்எல்ஏ தனக்கு இவ்வளவு, அமைச்சருக்கு இவ்வளவுன்னு ஒரு குறிப்பிட்ட அமவுன்ட்டை வாங்கிவிட்டாராம். இந்த தகவல் அமைச்சருக்கு தெரிந்ததும், எம்எல்ஏவை அழைத்து என் பெயரைச் சொல்லி ஏன் பணம் வாங்கினீங்கனு சத்தம்போட்டாராம். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் என் பெயரைச் சொல்லி யாரும் வாங்கக்கூடாதுன்னு எச்சரித்து அனுப்பினாராம்.

அதோடு தன்னை சந்திக்க வரும் அதிகாரிகளிடம் யாரும் பணி மாறுதலுக்காக அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது பொய். யாரும், யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லைன்னு என்றாராம். விரைவில் இதையே தனது அலுவலக வாசலில் போர்டாக வைக்கலாமா என்று யோசிக்கிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவர்புல் பெண்மணியின் உத்தரவை கேட்டு பொதுமக்கள் எதுக்காக குழம்பி இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பவர்புல் பெண்மணி புதுச்சேரிக்கு வந்தபோது, மாஜி போலீஸ் பெண் அதிகாரி போல தன்னை நினைத்துக்கொண்டு மக்கள் சந்திப்பு நடத்தினாராம். அந்த மாநிலத்தில் நிழல் கவர்மென்ட் நடத்துவதுதான் திட்டமாம். ஆனால், இவரது திட்டம் சில நாட்கள் கூட நீடிக்கலையாம். காரணம் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை மாறிப்போச்சாம்.

அதாவது, பவர்புல் பெண்மணியை சந்தித்து பலர் தங்களின் குடும்ப பிரச்னை, சொத்து பிரச்னை என தினமும், வகை, வகையாக எழுதி அலுவலகத்தில் குவிச்சாங்களாம். பவர்புல் பெண்மணியிடம் கொடுத்தால், காக்கிகள் வழக்கை வேகமாக முடிப்பாங்க.. அதேபோல மற்ற துறைகளிலும் நாம் அளித்த புகாருக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நினைச்சாங்களாம். இதை சீரியசாக நினைத்துதான் மக்கள் பலரும் பவர்புல் பெண்மணியிடம் புகாராக கொட்டி குவிச்சாங்க. ஆனால் நினைச்சது ஒன்று நடந்தது வேறு ஒன்றாக போச்சாம். பவர்புல் பெண்மணி அனுப்பிய மனுக்களை அப்படியே பீரோவில் போட்டு பத்திரமாக பூட்டி வைச்சுட்டாங்களாம்.

இது தெரியாமல் பவர்புல் பெண்மணி மனு வாங்கிக் கொண்டே இருந்தாங்க. ஒரு கட்டத்தில் மனுக்களின் நிலையை விசாரிச்சாங்களாம். அப்போது தான் மனுக்கள் அனைத்தும் தொலைந்து போகாமல் இருக்க பீரோவில் பூட்டி வைச்சுருக்காங்களாம். இதை கேள்விபட்டதும் அதிகாரிகள் மூலம் விசாரிச்சாங்களாம். ஆனால், அரசு தரப்பில் இருந்து எந்த சப்போர்ட்டும் இதுவரை கிடைக்கலையாம். இத்துடன் பிரச்னை முடிந்து இருந்தால் பரவாயில்லை.

மனு கொடுத்த மக்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வே வரவில்லை என்றதும் மீண்டும், பவர்புல் பெண்மணி மாளிகை முன்பாக கைக்குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு கொடுத்த பெட்டிஷனுக்கு தீர்வு தேவை என்று கோபத்தில் தொடங்கி கண்ணீரில் முடிக்கிறாங்களாம். மனு மீது நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் அப்புறம்தான் தெரிஞ்சுதாம். பவர்புல் மாளிகையில் இருந்து வரும் எந்த பெட்டிஷன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம். புல்லட்சாமி அதை பார்த்து கொள்வார் என்ற தகவல் கிடைத்ததாம். டெல்லி ஆதரவு அரசு என்பதால பவர்புல் பெண்மணியின் மாநில அரசுக்கு எதிரான பேச்சு எதுவுமே எடுபடவில்லையாம். இதனால விரக்தி நிலைக்கு போன பவர்புல் பெண்மணி, இனி சந்திப்பெல்லாம் கிடையாது. எது வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு புகாரை திருப்பிவிடுங்கள்.

தெலங்கானவுக்கு பிரச்னை என்பதால்தான் நான் மக்களுக்கு நன்மை செய்யலாம்னு இங்கே வந்தேன். இங்கேயும் எனக்கு பிரச்னை என்றால் வேறு எங்கே போவேன்னு புலம்பினாராம். இனிமேல் என்னுடன் புகைப்படம் எடுத்து, பொக்கே கொடுக்க விரும்புபவர்களை மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று கூறிவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பதவி உயர்வு வழங்காததால காவலர்கள் எல்லாரும் ரொம்பவே அதிருப்தியில இருங்காங்களாமே, அப்படியா…’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில காவலராக 10 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் ஏட்டு, 20 வருடங்கள் பணியாற்றியவங்க துணை உதவி ஆய்வாளர், 30 வருடம் பணியாற்றியவங்க எஸ்ஐ ஆக பதவி உயர்வு வழங்க கோப்புகள் ரெடியானதாம். கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒப்புதல் அளிக்கவும் முடிவு செஞ்சாங்களாம்.

ஆனா, இது தொடர்பான கோப்புகள் தலைமை செயலர், நிதித்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையே இருக்காம். எந்த நிலையில இருக்குன்னு தலைமை காவல் அதிகாரிகள் பாலோ செய்யலையாம். துணை உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகி நமக்கு முன்னே ஸ்டார் மாட்டிக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு வாங்கி கொடுத்து என்ன பயன் என்ற நினைப்பில் அலட்சியமாக அதிகாரிகங்க இருந்துட்டாங்க. அண்டை மாநிலத்தில் காவல்துறையில் பதவி உயர்வு சரியா கிடைக்கிறது. நம்ம மாநிலத்தில கிடைக்க மாட்டேங்குறதேன்னு காவலர்கள் ரொம்பவே அதிருப்தில இருக்காங்களாம். உள்துறை செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சராவது நடவடிக்கை எடுக்கணும்னு உரத்த குரலில் கோரிக்கை வேற வைச்சிருக்காங்களாம்..’’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார் விக்கியானந்தா.

The post மின்வாரிய அமைச்சர் டிரான்ஸ்பர் விஷயத்துல எம்எல்ஏவை வெளுத்து வாங்கியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Minister ,Electrics ,Yananda ,Peter Mama ,Government of Tamil Nadu Electricitarianam ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற அறிவிப்புகளை முழுமையாக...