×

புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி 8 பேர் வரவில்லை; 3 பேர் ஆஜர்.!

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காவலர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 8 பேர் வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் 26ம் தேதி மலம் கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் இறையூர், வேங்கைவயல், கீழ முத்துக்காடு, காவிரிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 147 பேரிடமும், ஒரு சிலரை திருச்சி சிபிசிஐடி அலுவலகத்திற்கும் வரவழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கு உரிய முறையில் விசாரணை நடப்பதை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கு இடமாக உள்ள 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பரிசீலனை செய்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா, வேங்கைவயலை சேர்ந்த 9 பேர், இறையூர் மற்றும் கீழமுத்துக்காடு பகுதியை சேர்ந்த தலா ஒரு நபர் என மொத்தம் 11 பேரிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் தலைமையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியும், பயிற்சி காவலர் உள்ளிட்ட 2 பேர் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்தில் குரல் பரிசோதனைக்காக ஆஜராக வேண்டும் என்றும் கடந்த 20ம் தேதி உத்தரவிட்டார். இதற்கிடையே குடிநீர் மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டதில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலந்த மனித கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் கடந்த 21ம் தேதி சென்னையில் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 11 பேரையும் இன்று அரசு மருத்துவமனையில் ஆஜராக உத்தரவிட்டனர்.

ஆனால் காலை 10.30 மணி அளவில் காவலர், 2 ஆண்கள் என 3 பேர் மட்டும் ஆஜராகினர். டிஎஸ்பி பால்பாண்டி மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனை உதவி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு மருத்துவ குழுவினர் 3 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்தனர். மீதமுள்ள 8 பேர் மருத்துவமனைக்கு வரவில்லை. எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வர 3 மாதம் ஆகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் உண்மை குற்றவாளிகள் கைதாவார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து டிஎஸ்பி பால்பாண்டி கூறுகையில், டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரி எடுக்க 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 3 பேர் மட்டும் ஆஜரானதால் அவர்களுக்கு ரத்தமாதிரி எடுக்கப்பட்டது. மீதமுள்ள 8 பேர் வரவில்லை. பிற்பகல் 3 மணி வரை அவர்கள் வராவிட்டால் வேறொரு நாள் ஆஜராக உத்தரவிடப்படும் என்றார்.

The post புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி 8 பேர் வரவில்லை; 3 பேர் ஆஜர்.! appeared first on Dinakaran.

Tags : Pudukottai Venkaiyal ,Pudukottai ,Pudukottai government hospital ,Venkai ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...