×

தினசரி 2 ஆயிரம் கீரைக் கட்டுகள் காட்பாடி டூ கோயம்பேடு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த 66புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 66புத்தூர், லட்சுமிபுரம் கிராமங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் விவசாயத்தினை தங்களது வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்துவருகின்றனர். அதிலும் விவசாயத் தொழிலில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த கீரைவகைகளையும் சுமார் 250 ஏக்கருக்கு பயிரிட்டு, அறுவடை செய்து கட்டுகளாக கட்டி நாள்தோறும் சென்னை, பெங்களுரூ வேலூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.இக்கீரை வகையில் அதிகப்படியாக சிறுகீரை, அறுகீரை, பருப்புக் கீரை, தண்டு கீரை, புளித்த கீரை, மணத்தக்காளி கீரை மற்றும் பாலாக்குக்கீரை வகைகளைப் பயிரிட்டு உரிய காலத்தில் கீரையை பிடுங்கி கட்டுகளாக கட்டி பாக்ஸ்களில் வைத்து தினசரி வேன் களில் விற்பனைக்கு அனுப்பிவருகின்றனர்.

கீரை சாகுபடி குறித்து காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த 66புத்தூர் கிராமம் பஜனைகோயில் தெருவை சேர்ந்த விவசாயி சரவணன் கூறியதாவது, ‘‘நான் 8ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களுக்கு சொந்தமாக 50 சென்ட் நிலம் உள்ளது. மேலும் 1 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து மொத்தமாக 1.50 ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்து வருகிறோம். எனது தாய் இந்திராணி, மனைவி விமலா ஆகியோரும் விவசாயத்திற்கு உதவி செய்கின்றனர். எங்களது குடும்ப வாழ்வாதாரமே விவசாயம் தான். கீரை உற்பத்தியில் திறம்பட கடின உழைப்புடன் செய்து வருவதால் அதற்கு தகுந்த வருமானம் கிடைக்கிறது.”

‘‘பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப்பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவுசெய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சிகொண்டு குறுக்கும்நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும். ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற கணக்கில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பருப்புக் கீரை, தண்டுக் கீரை, அறுகீரை ஆகியவை வெயில்காலங்களில் பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் சிறுகீரை, வெந்தயக்கீரை உள்ளிட்டவைகளும் பயிர்செய்கிறோம். இதுபோக பருப்புக் கீரை, பாலாக்குக் கீரைகளும் பயிர்செய்கிறோம். விதைகள் முற்றிய கீரையில் இருந்து கிடைக்கும். விதைகளை எங்களுக்கு தேவையான அளவு உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்கிறோம். மற்ற விதைகளை அரசு மற்றும் தனியார் விவசாய குடோன்களில் வாங்கிக் கொள்கிறோம்.

கீரை வகைகளில் சிறுகீரை, அறுகீரை, தண்டுக்கீரை விதை விதைக்கப்பட்டு
25 முதல் 30 நாட்கள் வரையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 இலை வந்தவுடன் யூரியாவை போட்டு 30ம் நாளில் முழுமையான கீரையை பிடுங்கி கட்டுகளாக கட்டி விற்பனைக்கு அனுப்புகிறோம். அதேபோல் பாலாக்கு 40 நாளிலும் மணத்தக்காளி, 45 நாளிலும் தண்டுகீரை, 40 நாளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. உரமாக மாட்டுச் சாணம், யூரியா போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.தினசரி 2ஆயிரம் கட்டு கீரைகளை அறுவடை செய்து வேன்மூலம் சென்ைன கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஒரு கட்டு கீரை ₹4 முதல் ₹5 வரையில் விற்பனை செய்கிறோம். இதில் கூலி ஆட்கள் செலவு ₹2 ஆயிரம்,வேன் செலவு ₹2 ஆயிரம், உரத்திற்கு, விதைக்கும் செலவாகிறது. செலவு போக இதில் ₹4 ஆயிரம் முதல் ₹5ஆயிரம் லாபம் கிடைக்கிறது. மாதத்திற்கு சுமார் ₹1.30 லட்சம் வரையில் வருமானம் கிடைக்கிறது.ஒரு ஏக்கர் நிலம் குத்தகைச் செலவு ₹20 ஆயிரம் கொடுக்கிறோம். மழை, வெயில் காலங்களில் பாதிப்புகள் இருந்தால் வருமானம் தடைப்படும். சாராசரியாக மாதந்தோறும் இந்த வருமானம் எதிர்பார்க்க முடியாது. மற்றபடி கீரை சாகுபடி செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். மானிய விலையில் உரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கூறினார்.

தொடர்புக்கு:
சரவணன் – 90478 00419

விதைநேர்த்திக்குப் பீஜாமிர்தம்

‘‘அடுத்த போகத்திற்குத் தேவையான கீரை விதைகளைப் பெரும்பாலும் கடையில் இருந்து வாங்குவதில்லை. சில செடிகளை மட்டும் பூக்கவிட்டு, அதிலிருந்து விதை எடுத்து வெச்சுக்குவேன். விதைகளைப் பீஜாமிர்தக் கரைசல்ல விதை நேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். அதனால, முளைப்புத்திறன் நல்லா இருக்கு. வேர் சம்பந்தமான நோய்களும் வர்றதில்லை. கீரை வயல், வரப்புகளில் 10 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடியை வெச்சு விட்டுட்டா, பூச்சிகள் தொல்லை இருக்காது. அதையும் தாண்டி, கீரை வயல்ல பூச்சிகள் தென்பட்டால் அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரியான கரைசல்களைத் தெளிச்சுடுவேன்” என்கிறார்.

The post தினசரி 2 ஆயிரம் கீரைக் கட்டுகள் காட்பாடி டூ கோயம்பேடு appeared first on Dinakaran.

Tags : Vellore District ,Gadbadi Thaluka Thiruvalam ,66Puttur ,Lakshumipuram Villages ,Puttur ,Kadbadi du Coimbed ,
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்