×

மலர் கண்காட்சிக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா-நுழைவு வாயிலில் பிகோனியா மலர் செடி நடவு

ஊட்டி : மலர் கண்காட்சிக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில், ஊட்டியில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தி, மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர்.

அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் பூங்காவை அழகு படுத்தும் பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு அலங்கார செடிகள் பாத்திகள் மற்றும் சரிவுகளில் நடும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மலர்செடிகளில் மொட்டுகள் மட்டுமே காணப்படும் நிலையில், மே மாதத்திற்கு முன்னதாக மலர்கள் பூக்கும் வகையில் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள், உரமிடும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், அங்காங்கே மலர் செடிகள் கொண்டு வண்ண அலங்காரங்களை மேற்கொள்ளும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், பூங்காவில் மலர் ெசடிகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது.

மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் மழை மற்றும் வெயிலில் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையால் செடிகள் சாய்ந்து விடாமல் இருக்காக குச்சிகள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது.நிரம்பி வழியும் லாட்ஜ், காட்டேஜ்: கேரள மாநிலத்தில் ரமலான் பண்டிகை விடுமுறை ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசலால் மக்கள் அவதிப்பட்டனர்.

கோடை வெயில் சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஊட்டிக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். கடந்த 22ம் தேதி ரமலான் பண்டிகை முடிந்த நிலையில், கேரள மாநிலத்தில் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனல் கடந்த மூன்று நாட்களாக ஊட்டியில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர். ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜ், காட்டேஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிந்தன. சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகரித்ததை தொடர்ந்து பெரும்பாலான காட்டேஜ், லாட்ஜ் உரிமையாளர் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.சாதாரணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படும் அறைகளுக்கு ரூ.2000 முதல் 3000 வரை உயர்த்தப்பட்டது. ஆனாலும், சுற்றுலா பயணிகள் அறைகளை முண்டியடித்து கொண்டு எடுத்து வருகின்றனர்.

மேலும், ஊட்டியில் அறைகள் கிடைக்காத நிலையிலும், கட்டணம் உயர்த்தப்பட்டதாலும், சிலர் வாகனங்களிலேயே உறங்கினர். நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு சவாரி செய்ய நேற்று சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஊட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து டிபிஓ சந்திப்பு, கலெக்டர் அலுவலகம் வழியாக தாவரவியல் பூங்காவிற்கு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டனர். எனினும், அதிக வாகனங்களால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், கமர்சியல் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. தாவரவியல் பூங்கா சாலை, ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. முறையாக திட்டமிடாத நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நகரில் போதிய பார்க்கிங் இன்றி வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும், பல சாலைகள் ஒரு வழிப்பாதைகளாக மாற்றப்பட்டதாலும், சுற்றுலா பயணிகளை அலைக்கழிக்க விட்டதாலும் பலர் நகருக்குள் வராமலேயே மாற்றுப்பாதையில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

The post மலர் கண்காட்சிக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா-நுழைவு வாயிலில் பிகோனியா மலர் செடி நடவு appeared first on Dinakaran.

Tags : Oodi ,
× RELATED முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா?...