×

சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் ஆற்றல் வாய்ந்த பரிகாரங்கள்

அன்பார்ந்த தினகரன் வாசகர்களுக்கு, வணக்கம். மிகத்துல்லியமாகக் கணிக்கப்பட்ட நட்சத்திர வாரியான சனிப்பெயர்ச்சிப் பலன்கள் இப்பொழுது உங்கள் கைகளில் தவழ்கிறது. திருக்கணிதப்படி ஜனவரியில் சனி பெயர்ச்சி நடந்திருந்தாலும், வாக்கியக் கணிதப்படி சனி பெயர்ச்சி பங்குனி மாதம் 15 ஆம் தேதி, 29.3.2023 புதன்கிழமை பகல் 1.16க்கு நடை பெறுகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தாலும் இந்த சனி, ஆனி மாதம் 12ஆம் தேதி (27.06.2023) வக்ரகதி ஆரம்பம். ஐப்பசி மாதம் ஆறாம் தேதி (23.10.2023) சனி வக்கிரகதி நிவர்த்தி ஆகும். இதனால் பெரிய அளவு பலனில் மாற்றங்கள் ஏற்படாது. எனவே வக்கிர கதி என்கிற சிறு கால அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை.

கும்ப ராசியில் உள்ள அவிட்ட நட்சத்திரம் 3,4 பாதங்களில் நுழைந்து, சதய நட்சத்திரம் முழுமையாக பயணித்து, பூரட்டாதி முதல் மூன்று பாதங்களில் நிற்கிறார். அவர் 6.3.2026 வரை கும்பராசியில் இருப்பர். இதில் அவிட்ட நட்சத்திரத்தில் 29.03.2023 முதல் 21.02.2024 வரையிலும், சதயத்தில் 21.02.2024 முதல் 16.3. 2025 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் 16.03.2025 முதல் 06.03.2026 வரையிலும் பிரவேசித்து தனது பலாபலன்களை அளிக்கிறார்.

கும்ப ராசி கால புருஷனுக்கு பதினோராவது ராசியாகும். இது அவருடைய ஆட்சி வீடு. தன்னுடைய ஆட்சி வீட்டில் மூலத்திரிகோண பலம் பெற்று பலாபலன்களை அளிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி குறித்து எந்த வாசகரும் பயப்பட வேண்டியதில்லை. காரணம், சனி தனது சொந்த வீட்டில் இருக்கிறார். யார் ஒருவரும் தனது சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது பிறருக்குக் கெடு பலன்களை தருவதில்லை என்கிற விதி சனி பகவானுக்கும் பொருந்தும்.

அவர் மொத்தம் 1085 நாட்கள் கும்ப ராசியில் தனது சொந்த வீட்டில் இருக்கின்றார். தனது நேர் பார்வையால் சிம்ம ராசியைப் பார்க்கின்றார். சிறப்பு பார்வையான மூன்றாம் பார்வையாலும், பத்தாம் பார்வையாலும் செவ்வாயின் இரண்டு ராசிகளான மேஷ ராசியையும், விருச்சிக ராசியையும் பார்க்கின்றார். சனியினுடைய பலாபலன்களை, மற்ற கிரகங்களுடைய நிலைகளையும் கருத்தில் கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ராகு கேது மற்றும் குரு போன்ற நீண்ட காலம் ஒரு ராசியில் தங்கி இருக்கும் கிரகங்களையும் கருத்தில் கொண்டு இந்த பலாபலன்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் துல்லியமாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதில் உள்ள பலன்கள் கூடுவதும் குறைவதும் என்பது அவரது ஜென்ம ஜாதகங்களின் அடிப்படையிலும் அந்த ஜென்ம ஜாதகங்கள் இப்போது தருகின்ற தசா புத்தி அடிப்படையில் அமையும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அசுப தசைகள் நடந்து நட்சத்திரத்திற்கு சனி பகவான் இடையூறு தரும் நிலையில் இருந்தால் சுப பலன்கள் குறைவதோடு தடைகளும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப்போலவே சுப தசைகள் நடந்து, நட்ஷத்திரத்திற்கு சனி பகவான் அருளை அள்ளி வழங்கும் நிலையில் இருக்கும் நட்சத்திரகாரர்களுக்கு சுப பலன்கள் சற்றும் குறையாமல் நல்ல விதமாகவே நடக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி அடுத்த 2 1/2 ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்.

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

The post சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் ஆற்றல் வாய்ந்த பரிகாரங்கள் appeared first on Dinakaran.

Tags : Dinagaran ,Saturn ,Dinakaran ,
× RELATED இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…