×

பாளை திரிபுராந்தீஸ்வரர், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

 

நெல்ைல, ஏப். 25: பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பாளையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திரிபுராந்தீஸ்வரர்- கோமதியம்பாள் கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. அதன்படி இன்று (25ம் தேதி) கற்பகவிருட்சம் மற்றும் தாமரைப்பூ வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடக்கிறது. நாளை (26ம் தேதி) பூதம், சிம்ம வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலாவந்து அருள்பாலிக்கின்றனர். 27ம் தேதி ரிஷப வாகனத்தில், 28ம் தேதி இந்திர வாகனத்திலும், 29ம் தேதி யானை, அன்ன வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. மேலும் அன்றைய தினம் 63 நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறும். மே 1ம் தேதி மாலை 4 மணிக்கு கங்காளநாதர் வீதியுலா நடக்கிறது. மறுநாள் (2ம் தேதி) திருவிழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. 3ம் தேதி தீர்த்தவாரியும், 4ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுஜாதா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

இதே போல் நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் தாமிரபரணி நதிக்கரை குறுக்குத்துறையில் குடவரை கோயில் கொண்டு அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க இக்கோயிலில் கும்பாபிஷேக பணிக்காக கோபுரம் மற்றும் விமானம் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக உள்விழாவாக நடத்தப்படும் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு கொடிமரத்திற்கும், முருகப்பெருமான், வள்ளி- தெய்வானைக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். 7ம் திருநாளில் வைர கிரீடமும், வைரவேலும் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. விழா நடைபெறும் 11 நாட்களும், கோயிலில் சுவாமிக்கு காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

The post பாளை திரிபுராந்தீஸ்வரர், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chitra ,Palai Tripurantheeswarar ,Nellai Krasanthar Murugan Temples ,Nelayla ,Chitrai Festival ,Palai Tripurantheeswarar Temple ,Nellai Krasantara Subramania Swamy Temples ,Nellai Krasantara Murugan Temples ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?