×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை: சாலையில் மரங்கள் முறிந்துவிழுந்தன

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அதிகபட்சமாக ஜவ்வாது மலையில் 65 மி.மீ மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடையின் தொடக்கத்திலேயே 0.2 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. அதனால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறையும் நிலை ஏற்பட்டது. அதோடு, பகவில் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், கோடை மழை ஆறுதல் அளித்திருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி, அதிகாலை வரை பரவலான கனமழை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடி. மின்னலுடன் பெய்த கனமழையால் திருவண்ணாமலை – போளூர் சாலையில் ஒரு சில இடங்களில் சாலையோர புளிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. அதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது. உடனடியாக, நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, இரவோடு இரவாக சாலையில் இருந்த புளிய மரங்களை ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர். அதனால், போக்குவரத்து பாதிப்பு உடனடியாக தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழை அளவின்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜவ்வாதுமலை பகுதி ஜமுனாமரத்தூரில் 65 மிமீ மழை பதிவானது. அதேபோல், ஆரணியில் 62 மிமீ, செய்யாறில் 26.20 மிமீ. செகத்தில் 62.60 மிமீ, வந்தவாசியில் 2 மிமீ. போளூரில் 27.20 மிமீ, திருவண்ணாமலையில் 18.30 மிமீ, தண்டராம்பட்டில் 2 மிமீ, கலசபாக்கத்தில் 5 மிமீ, சேத்துப்பட்டில் 1.60 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 37.60 மிமீ, வெம்பாக்கத்தில் 20 மிமீ மழை பதிவானது. மேலும், நேற்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்தது. மாலையில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது. கோடையின் தாக்கத்தை திடீர் மழை தணித்திருப்பதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை: சாலையில் மரங்கள் முறிந்துவிழுந்தன appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Thiruvannamalai ,Javvadu Hill… ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி