×

திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது பாஜ தலைவர் அண்ணாமலை கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது: ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்

சென்னை: ஜி ஸ்கோயர் நிறுவனம், திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது. இந்நிறுவனம் குறித்து, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ஜி ஸ்ெகாயர் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து, ஜி ஸ்கொயர் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் குறித்து நீங்கள் சில கருத்துகளை முன் வைத்திருந்தீர்கள், அந்த சர்ச்சை கருத்துகளுக்கான விளக்கமே இந்த கடிதம். உங்கள் குற்றச்சாட்டுகள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது எங்களின் வியாபாரத்தில் மறைமுக தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கும், உங்களுக்கும், செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து புரிதலை ஏற்படுத்த பல முக்கிய சட்ட ஆவணங்கள் மற்றும் வியாபார ரீதியான ஆவணங்கள் அடங்கிய இந்த விரிவான விளக்கத்தை அளிக்கிறோம்.

ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், 2012ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். ‘ஜி ஸ்கொயர்’ என்ற பெயரில் கட்டுமானத்துறையில் இயங்கி வருகிறது. எங்களுடைய மற்ற நிறுவனங்கள் கூட்டாக ‘ஜி ஸ்கொயர் குரூப்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. தொழில் முன்னோடிகளாக திகழும் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு இதுவரை 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை விற்பனை செய்துள்ளோம். இதன் மூலமாக 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானத்திற்கு வழி செய்துள்ளோம். மேலும், கொரோனா தொற்று காலத்தில் எங்கள் நிறுவனம், 4,800 படுக்கைகளை மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கிறோம். 1,000 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை இறைச்சிக்கூடங்களில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறோம். 4,000க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பாதுகாத்து வருகிறோம்.

எங்கள் நிறுவனம் மூலம் 3,300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, முத்திரை வரி, பதிவு கட்டணம் மூலமாக ரூ.125 கோடியும், வரியாக ரூ.300 கோடியும் எங்கள் நிறுவனம் செலுத்தி இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு சில தனிநபர்கள் வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியிருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆனால், மே மாதம் 2021 ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகே எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாப மீட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. நீங்கள் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களும் இந்த வதந்திகளின் அடிப்படையாய் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

இந்த தவறான செய்திகள் எதிர்பாராதவிதமாக தங்கள் மூலமாக தற்போது ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டுள்ளன. தாங்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. மேலும் இவற்றில் எந்த முகாந்திரமும் இல்லை. திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், நகரங்களில் தனி வீடுகளுக்கான தேவை அதிகரித்தது. அதன்படி, எங்கள் நிறுவனத்திற்கு இருந்த முன் அனுபவத்தின் மூலமாக நகரங்களுக்குள் காலி இடங்களை கண்டறிந்து வீட்டு மனைகளாக மாற்றினோம். இதுவரை நாங்கள் கட்டிடங்கள் கட்டிய பகுதிகளில் மற்ற கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளையே கட்டி வந்தன. நாங்கள் அந்த பகுதிகளில் தனி வீடுகளை உருவாக்கியது எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நீங்கள் வெளியிட்ட, எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்குப் புறம்பானவை என்பதையும், அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை என்பதையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். நீங்கள் வெளியிட்ட வீடியோவில் ‘ஜி ஸ்கொயர்’ரின் உரிமையாளர்கள் திமுகவின் முதல் குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பொய்யான தகவல். இந்த உண்மைக்கு புறம்பான தகவல் உங்கள் கட்சியின் தமிழ்நாடு பாஜ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் ‘திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, இவற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தேசிய கட்சியில் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் உங்களை போன்ற ஒரு நபர் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. வீடியோ வெளியிடும் முன் எங்களிடம் கேட்டிருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு முறையான விளக்கங்களை வழங்கியிருப்போம். நீங்கள் குறிப்பிட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு தவறானதாகும். எங்கள் சொத்து மதிப்பு ரூ.38,827.70 கோடி என நீங்கள் குறிப்பிட்டிருப்பதை மறுக்கிறோம். ஜி ஸ்கொயர் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளோடு நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூ.38,827.70 கோடி மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையத்திலும், எங்களிடமும் உள்ள வில்லங்கச் சான்றிதழ்களின் மூலம் பல்வேறு கால கட்டங்களில் 6,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறியமுடியும். ஏற்கனவே விற்கப்பட்ட மனைகளின் மதிப்போடு, பழைய மதிப்புகளையும் கூட்டி தவறான வருவாயை காட்டியுள்ளீர்கள். நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகை முற்றிலும் தவறானது. நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது எங்கள் இணையப் பக்கத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில், 22 திட்டங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டன. இந்த மனைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கட்டுமானத்தையே தொடங்கிவிட்டனர்.

சில திட்டங்களில் பூர்வாங்க ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன, ஆனால் நீங்களோ அனைத்துமே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சொத்து என குறிப்பிட்டுள்ளீர்கள். முறையான ஆய்வு செய்தால், நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தங்களுக்கு தெரியவரும். இதனை நிரூபிக்க தேவையான சில பின்னிணைப்புகளையும் இங்கே இணைத்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜி ஸ்ெகாயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது பாஜ தலைவர் அண்ணாமலை கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது: ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : dimugu ,Baja ,Annamalai ,G Square Institute Explanation ,Chennai ,G-skoer ,Tamil Nadu ,Paja ,G Square Institute ,
× RELATED தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர்...