![]()
திருவொற்றியூர்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சஞ்சய் (எ) மிட்டாபாய் (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே கடற்கரை சாலையில் சஞ்சய் தனது நண்பர்களான அஜித், ஹரி பிரசாத், சந்தோஷ், முபாரக், இம்ரான் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது இவர்களுக்கும், எதிரே மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு கும்பலுக்குமிடையே போதையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு அதிகமான போதையில் நடந்து வந்து திருச்சினாங்குப்பம் கடற்கரை மணலில் சஞ்சய் தரப்பினர் அனைவரும் படுத்தனர். அப்போது தகராறு செய்த அந்த மர்ம கும்பல், இவர்களை பின் தொடர்ந்து வந்து சஞ்சயிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், மர்மகும்பல் சஞ்சய்யை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டனர். உடனே இதுகுறித்து சக நண்பர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சஞ்சய்யை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று சஞ்சய்யை கொலை செய்த வழக்கில் திருவொற்றியூர் பூங்காவனம்புரத்தைச் சேர்ந்த தேவராஜ் (25), பிரதீப் (21), காலடிப்பேட்டையை சேர்ந்த பரத் (21), சந்தோஷ் (21), கணக்கர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா (21), ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த பாலா (21), தண்டையார்பேட்டை பகுதி எல்.என்.ஜி. காலனியைச் சேர்ந்த சதீஷ் (23), பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஆகிய 8 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்து வரும் போலீசார், இதில் தலைமறைவாக உள்ள தமிழரசன் என்பவரை தேடி வருகின்றனர்.
The post வியாசர்பாடி வாலிபர் கொலை வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 8 பேர் கைது appeared first on Dinakaran.
