×

புளியந்தோப்பில் மேம்பாலம் கோரி பொதுமக்கள் ரயில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தை

பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள கஸ்தூரிபா நகர், வெங்கடேசபுரம், சத்தியவாணி முத்துநகர், தாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து வியாசர்பாடி பகுதிக்குச் செல்வதற்கு ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி சென்று வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்த பகுதியில் ரயில்களில் செல்லும் பயணிகளிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாகவும், மேலும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் வழிப்பறிகள் நடப்பதாகவும் தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கும், வியாசர்பாடி மற்றும் புளியந்தோப்பு போலீசாருக்கும் புகார்கள் வந்தன.

இதனையடுத்து குறிப்பிட்ட அந்த பகுதியில் இருந்த சிறிய வழியை போலீசார் அடைத்தனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் யாரும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் இருந்து வியாசர்பாடி பகுதிக்குச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் புளிந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாசர்பாடி ராமலிங்கா கோயில் பகுதியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற ஒரு ரயிலை மறித்தனர். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து போகாத காரணத்தினால், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு, தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஜானி செல்லப்பா, ஐயப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் இருந்து வியாசர்பாடி பகுதிக்கு செல்வதற்கு மேம்பாலம் கட்டி தர வேண்டும். இல்லையென்றால் அதே பகுதியில் உள்ள சிறிய சுரங்கப் பாதையை சுத்தம் செய்து தர வேண்டும் என்றனர்கள் கோரிக்கை வைத்தனர். போலீசார் தரப்பில் ரயில்வே போலீசாருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

The post புளியந்தோப்பில் மேம்பாலம் கோரி பொதுமக்கள் ரயில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Pulyanthop ,Perambur ,Kasthuripa Nagar ,Venkatesapuram ,Sathyavani Muthunagar ,Das Nagar ,Pulianthop Kanikapuram ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு