×

12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு: சி.ஜ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என சி.ஜ.டி.யூ. சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சௌந்தரராஜன்; 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டிய காலம் இது. அதிக லாபம் வரும் என்றாலும், தொழிலாளர்கள் நலனே முக்கியம். 8 மணி நேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே, 12 மணி நேரம் வேலைக்குப் பணிப்பதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. தொழிலாளர்களின் நலன், உடல்நலம், ஆரோக்கியம், உரிமையைத் தாண்டி வேறெந்த லாபம் வந்தாலும், அதில் எந்த பயனும் இல்லை. எந்த விளக்கமும் தேவை இல்லை. 12 நேர வேலை சட்டத்தை முற்றாகத் திரும்பப் பெற வேண்டும்.

தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை முதல்வரிடம் எடுத்துரைப்போம் என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள். முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். தமிழ்நாடு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

The post 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு: சி.ஜ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,General Secretary ,Soundararajan ,Chennai ,C.J.T.U. ,Secretary General ,Dinakaran ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...