×

ஆன்லைன் விளையாட்டு குறித்து புதிய விதிமுறைகள்: அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: ஆன்லைன் விளையாட்டு குறித்து புதிய விதிமுறைகளை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்து பலரும் உயிரை பறிகொடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விவகாரம் பூதாகர பிரச்சனையாக இருந்து வந்தது. இதனால், தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அந்த மசோதா மீது சில விளக்கங்களைக் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். எனவே அந்த சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைத்தது.

இதுவும் சில நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 21ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
இது, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள்-2023 என்று அழைக்கப்படும். 21ம் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்-2022-க்கான சட்ட விதியாக இது ஏற்கப்பட வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்தல், இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் கொடுத்து, பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

இந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தவறான தகவல்களை கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டீசை ஆணையம் அளிக்க வேண்டும்.

அந்த நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ, இதில் எது முதலாவது நேரிடுகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள். அவர்களுக்கு மறுபணி நியமனம் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் விளையாட்டு குறித்து புதிய விதிமுறைகள்: அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Publication ,Chennai ,Tamil Nadu government ,Government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...