×

நின் திரு நாமங்கள் தோத்திரமே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

“அவமாயினும்”இப்படிப்பட்ட உயர்வான சொல்லைச் சொன்ன பட்டர் “அவமாயினும்” என்று கூறுவதன் காரணம், என்ன என்பதைக் காண்போம். இச்சொல் உயர்ந்ததாக இருந்தால் அதற்கு காரணம் உமையம்மையின் அருள். அதே சமயத்தில் தாழ்ந்ததாகவோ தவறாகவோ இருந்தால், அதற்கு முழு பொறுப்பும் என்னுடையது. ‘மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத’ (87) உமையம்மையைப் பற்றி தான் சரிவர புரிந்துகொள்ளாத நிலையில் இப்படிப்பட்ட தவறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய விருப்பு வெறுப்பினால் உமையம்மையைச் சார்ந்த கருத்துக்களை மாற்றிக் கூறியிருக்கலாம். ‘நன்றே உனக்கு’ (30) ‘பிறவியும் வம்பே’ (93) என்ற வரிகளால் இதை நன்கு உணரலாம். ‘அறிவு ஒன்று இலேன்’ (81) என்பதனால் ஆன்மாவைப்பற்றி அறிவு இல்லாததால் உமையம்மையை பற்றி தெளிவுற கூற இயலாது.

அந்த சூழலிலும் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரத்தினால் தேவை, ஆசை, அச்சம், போன்ற காரணத்தினால் உணர்வுகளால் பாதிக்கப்பட்டும் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்பதையே `உடம்போடு உயிர் உறவு அற்று மறக்கும்போது’ (89) என்ற அச்சத்தினால் கூறுகிறார் பட்டர். ‘ஆசைக் கடலில் அகப்பட்டு’ (32) ‘பாழ்நரகக்குழிக்கே அழுந்தும்’ (79), `கரும நெஞ்சால்’ (3) என்பதால் தவறு ஏற்படலாம்.

மேற்கண்ட காரணங்களைக் கொண்டே, தான் சொன்ன சொல் அவமாய் இருக்கக் கூடும் என்பதாக உறுதிசெய்தே அதை நீக்குவதற்கு முயல்கிறார். மேலும், தேவதை களைப் பற்றிய ஆகமநூல்களையோ, தோத்திர நூல்களையோ, மந்திர நூல்களையோ பற்றி விளக்கம் கூறும்போது தவறாக கூறினால் மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாக வேண்டும். அதனால் வேதத்தை தவறாக உச்சரிக்க கூடாது. தவறானவர்களிடம் சொல்லக் கூடாது, தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இம்மூன்றினாலும் பாவம், அறியாமை, தீய விளைவு, தோன்றும்.

‘யோமோகாத் தாஸ்யதி ச பபியான் பவதி’ என்கிறது வேதாந்தம். [எவன் ஒருவன் மயக்கத்தால் பாவியர்களுக்கு சொல்கிறானோ அவன் பாவத்தை அடைவான்] “மாத்ரா பலம்” எழுத்துக்களை உச்சரிக்கும் அளவு சார்ந்தே வேதத்திற்கு பலன் என்கிறது. வேதத்தின் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்வது, வேதம் என்னை காக்கும் என்பதை வேதத்தை நான் காக்கிறேன் என்பதாக தவறாக புரிந்துகொள்வதாகும் `மயி வேதா’ என்கின்ற வேதப்பகுதி.

இரு பொருளுக்கும் இடமாய் உள்ளதை அறிந்துகொள்ளலாம். ஒரு சொல் இருபொருள் படும்படி இருந்ததனாலும், தவறு ஏற்படலாம். இத்தகைய பாவங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள விழையும் அச்சக்குறிப்பை விளக்குகிற வகையில் “அவமாயினும்” என்கிறார்.

“நின் திரு நாமங்கள்
தோத்திரமே”

“தோத்திரம்” என்ற சொல்லை முதலில் அறிவோம். `ஸ்தோத்திரம்’, `ஸ்துதி’ என்ற வடசொல்லின் திரிபு தோத்திரம் எனப்படுகிறது. ஸ்துதி என்பது உயர்ந்தோரின் உயர்ந்த குணங்களை, உண்மையான குணங்களை, நன்மையான குணங்களை அவர்களிடத்திலேயே எடுத்துக் கூறுவதனால் அவர்களிடத்து உள்ள தனக்கு வேண்டிய ஒன்றை பெற்றுக்கொள்ள முயலும் கவிதையாகும். இந்த ஸ்தோத்திரம், வடமொழியைப் பொறுத்தவரை `அர்த்த ஸ்தோத்திரம்’, `காம ஸ்துதி’, `தர்மனுதி’, `மோட்சஸ்துதி’ என்ற நான்காகப் பிரிக்கப்படுகிறது.

`தர்மனுதி’ என்பது, மாணவர்கள் உயர்ந்த பொருளை [கல்வியை] அறிவதற்காக குருவைப் புகழ்ந்து போற்றுவது போன்றது. செல்வத்தைப் பெறுவதற்காக செல்வந்தரை நோக்கி பாடப்படுவது `அர்த்த ஸ்தோத்திரம்’. தனக்கு விருப்பமான ஒன்றை பிறரிட மிருந்து பெறுவதற்காக மட்டுமே அவர்களை புகழ்ந்து பாடுவது `காமஸ்துதி’. வீடுபேறு, ஞானம், துன்ப நிவர்த்தி இவற்றிற்காக இறைவனை பாடுவது `மோட்சஸ்துதி’. இந்த நான்கு வகையிலும் உமையம்மையை குருவாக நினைத்து ‘தலைமேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட நேசத்தை’ (32) என்று “தர்மதுதி” பாடுகிறார்.

‘தனம்தரும்‌; கல்விதரும்‌; ஒருநாளும்‌ தளர்வறியா
மனம்தரும்‌; தெய்வ வடிவும்‌ தரும்‌ நெஞ்சில்‌ வஞ்சம்‌ இல்லா
இனம்தரும்‌; நல்லன எல்லாம்‌ தரும்‌ அன்பர்‌ என்பவர்க்கே
கனம்‌ தரும்‌; பூங்குழலாள்‌ அபிராமி கடைக்கண்களே.’ (69)
– என்று அர்த்தஸ்தோத்திரம் பாடுகிறார்.

‘அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி’ (71), ‘அழியாத குணக்குன்றே’ (95), ‘வல்லி நீ செய்த வல்லபமே’ (65) என்றவாறு உமையம்மையை பாராட்டி தன் தேவைக்காக காமஸ்துதியை பாடுகிறார்.

‘நாயகி நான்முகி, நாராயணிகை நளின பஞ்ச
சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை சாதி நச்சு
வாயகி, மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள்‌ சரணம்‌ அரண்‌ நமக்கே’ (50)

– என்று மோட்சத்திற்குரிய மந்திர தேவதைகளைக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

இந்த நான்கையும் மனதில்கொண்டே நால்வகை பயனையும் அடைய குருவையும் செல்வந்தரையும் தேவயைபூர்த்தி செய்பவரையும் இறைவனாகத் தொழவேண்டும். தொழுது பெற வேண்டும், அதற்கு தோத்திரம் செய்ய வேண்டும் என்பதையே ‘தோத்திரம் செய்து தொழு’ (67) என்று உமையம்மையின் அருளை பெறுவதற்குரிய வழியை பெற்றுத்தரும் சாதனத்தை, பெறுவதனால் ஏற்படும் பயனை, பயனால் விளையும் அனுபவத்தையே தோத்திரம் என்கின்றார். மேலும் பூஜை, தியானம், ஜெபம், தவம், வேள்வி, ஞானம், அத்யயனம், அப்யாசம், சாஹசம், அனுபூதி என்ற வழிபாடு, இறை நினைவு, திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வது வழுவாமை, மற்றும் எப்பொருளையும், தான் பெற்ற அனுபவ அறிவின் வழிநோக்குவது.

வேதம் முதலியன பயிலுதல், யோகம் முதலியன பழக்குதல், பழகியதால் தோன்றும் சிறப்புஅனுபவம், தெய்வத்தின் காட்சியை, தான் அனுபவத்தில் காண்பது என்ற கடினமான இயல்பான நடைமுறையிலிந்து சற்று மேம்பட்ட செயலை செய்வது என்பது எல்லோருக்கும் சற்று இயலாது என்பதால், அனைவரும் எளிமையான வழியில் பின்பற்றத்தக்க சிறப்பான சாதனம் தோத்திரம் என்கின்றார். மேலும், தோத்திரம் என்பது அப்பர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் அருணகிரிநாதர் போன்ற உயர்ந்த இறையருளாளர்கள் தோத்திரத்தை செய்தே வீடு பெற்றனர், அவர் செய்த தோத்திரங்களை பாடியே அப்பூதி அடிகள் முதலிய அருளாளர்கள் பயன்பெற்றார்கள்.

அருளாளர்கள், தான் செய்த தோத்திரத்தை சொல்பவர்களுக்கும் தனக்கு அருளியவாறே அருள வேண்டும் என்று இறையை நேரில் கண்டு பிரார்த்தித்தே அவரிடம் உத்தரவு பெற்றுள்ளனர். அந்த பாடலை சொல்லியவர்களும் பயன் பெற்றுள்ளனர். மெய்கண்ட சிவம் போன்ற சில அடியவர்களின் வரலாற்றின் மூலம் தேவாரம் போன்ற தோத்திரத்தின் பெருமையை அறியமுடிகிறது. அதனாலேயே தோத்திரத்தை மிகச் சிறந்த வழியாக குறிப்பிடுகிறார் பட்டர்.

“நின் திருநாமங்கள்”

உலகில் உள்ள சொற்களைக்கொண்டு உலகில் உள்ளோர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் இனிமையான இசைக்கு தக்கவாறு எழுதுவது கவிதை. தோத்திரம் என்பது கவிதையல்ல. சரியான சொற்களைக் கொண்டு முறையான இலக்கணம் கண்டு தெளிவாக பொருள்புரியும் வண்ணம் எழுதப்படுவதும் அல்ல. தோத்திரம் என்பது இறைவனின் நாமங்களால் சிறப்புடையது. நாமம் என்ற சொல்லை அபிராமிபட்டர் மூன்று பொருளில் பயன் படுத்துகிறார். ‘கன்னியது உன் புகழ் கற்பது உன் நாமம்’ (12) என்ற வார்த்தையால் `தேவி மஹாத்மியம்’ என்ற தோத்திரத்தை குறிப்பிடுகிறார். ஸகஸ்ரநாமத்தை கற்பது உன் நாமம் என்கிறார். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தியானம் ஒரு மூலமந்திரம் ஒரு தேவதை என்று காட்டும் சாக்தாகமங்களை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

இறைவனின் திரு உருவம் அவளை அழைப்பதற்கு சாதனமாகிய மந்திரம் பூசனை முறை மற்றும் பத்ததி என்பதை தனியாக வகுத்துள்ளார். அந்த வகையில் நாமம் என்பதால், தேவதையின் மூலமந்திரத்தைக் குறிப்பிடுகிறார். அதையே ‘நாமம் திரிபுரை’ (73) என்றும். ‘பயிரவி பஞ்சமி…….செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’ (77) என்று கூறுகிறார். இலக்கண விதிகளுக்கும் கட்டுப்படாத இறை அருளையே தன் பலமாகக்கொண்ட பக்தி உணர்வோடு சொல்லப்படுகிற எழுத்தையோ, சொல்லையோ, வரியையோ மந்திரம் அல்லது நாமம் என்கிறார்.

அந்த வகையில், ஹா ஹா, ஹூ ஹூ என்பதும் மந்திரமே. ஏனெனில், இலக்கண விதிகளுக்கு இவை உட்படாவிடினும், உமையம்மையின் அருளைப் பெற்றுத் தருவதால், இது மந்திரமாகவே கருதப்படுகிறது. அதுபோல, உன்னைக் கருதியே சொல்லப்பட்டதால் அபிராமி அந்தாதியாகிய இந்த தோத்திரம் எவ்வகையில் தவறாயினும் உன் கருணையால் தோத்திரமே என்று உறுதியாக குறிப்பிடுவதையே “நின்திரு நாமங்கள் தோத்திரமே” என்றார்.

“அந்தமாக”

“வல்லபம் ஒன்றறியேன்” என்பதனால் உபாசனைக்குரிய எந்த நெறி முறையையும் ஆசாரத்தையும் அறியாதவனாய் இருக்கிறேன். “சிறியேன்” என்பதனால் உபாசனைக்கு ஆகாத கோபம், பொறாமை இது போன்ற தடைப் பண்புகள் அனைத்தையும் இயல்பாக பெற்றிருக்கிறேன். “நின் மலரடி செம்பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன்” என்பதனால் உன் திருவடியின் மீது ஆசை கருதி அன்பு கொண்டு நீயே அனைத்தையும் கொடுப்பாய் என்று உன் கருணையின் மீது அசைவற்ற நம்பிக்கை உண்டு என்கிறார்.

“பசும்பொற் பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்” என்பதனால் வேண்டிய அனைத்தையும் தரும் வல்லமை உடையவளாய் நீ இருக்கிறாய் “வினையேன் தொடுத்த சொல் அவ மாயினும்” நான் சொல்லிய சொற்களில் தவறு இருந்தாலும்,“நின்திரு நாமங்கள்‌ தோத்திரமே” உன் கருணை என் மீது இருப்பதனால் உன் அருளால் நான் சொன்னதனால் இந்த தோத்திரமானது மந்திரம் போன்ற பலனைத் தரும் என்கிறார் பட்டர். அதைச் சொல்லி நாம் பயனைப் பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post நின் திரு நாமங்கள் தோத்திரமே! appeared first on Dinakaran.

Tags : Dothira ,Anmikam ,Abhirami Anthadi ,Shakti Tattva ,
× RELATED சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி