×

பிஏபி திட்டம் உருவாக காரணமாக இருந்த காமராஜருக்கு ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை அமைக்கப்படும்

*தமிழக முதல்வர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

பொள்ளாச்சி : பிஏபி திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த காமராஜருக்கு ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை அமைக்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, பிஏபி எனப்படும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்கு உட்பட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும்.

பிஏபி திட்டத்தால், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பரம்பிக்குளம்-ஆழியார் பாசன திட்டம் (பிஏபி), அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில், தமிழக-கேரள இரு மாநில அரசு பேச்சுவார்த்தையின் மூலம் உருவாக்கப்பட்டது. பிஏபி திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களான ஒருவரான வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு, ஆழியார் அணை பூங்காவின் ஒரு பகுதியில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஒன்றிய அரசின் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் எம்எல்ஏ பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோருக்கும் உருவச்சிலை அமைக்கும் பணியும் நடக்கிறது.இதில், பிஏபி திட்ட செயலாக்கம் சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தவரான முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவச்சிலையும் பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும் என, பல்வேறு விவசாயிகள் மட்டுமின்றி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தினர், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.50 லட்சத்தில் உருவ சிலை அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தார். இதனால், பிஏபி பாசன பகுதி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் கமிட்டி கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி கூறியதாவது: பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, கினத்துக்கடவு தாலுகா மற்றும் குடிமங்கலம் சுல்தான்பேட்டை குண்டடம் ஒன்றியங்களில் விவசாய பெருமக்களை விவசாயம் மட்டுமல்லாது தொழில் அதிபர்களாக குறிப்பாக இன்றைக்கு இளம் தொழில் முனைவோர்கள் உருவாக அடிப்படை காரணமாக அமைந்தது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்தான் என்றால் மிகையாகாது. இத்திட்டம் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த போது கொங்கு மண்டல தியாகிகள் பி.கே. பழனிசாமி கவுண்டர், சி.சுப்பிரமணியம், தொழிலதிபர் நா.மகாலிங்கம் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று உலகிலேயே ஒரு உன்னதமான நீராதாரத்தை சேமிக்க பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை கொண்டு வந்தனர்.

அதற்காக காமராஜர் தலைமையிலான அரசு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முடிக்க எடுத்து கொண்ட காலம் மிகக்குறைவாகும். பொள்ளாச்சி உலக அளவில் பொருளாதாரத்தில் உயர காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் பாசன விவசாய சங்கங்கள், வியாபரிகள் சங்கங்கள் மற்றும் பொள்ளாச்சி வாழ் பொதுமக்களின் ஐம்பது ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது.

1984ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வியாபார சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக காமராஜருக்கு சிலை அமைக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதற்கான சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டு பொள்ளாச்சி பேருந்து நிலைய பகுதி, ரவுண்டானா, தேர்நிலை, நியூஸ்கீம் ரோடு பல்லடம் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் ஏதாவது ஒரு இடம் ஒதுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை செயல்படுத்தி தந்த காமராஜருக்கு சிலை இல்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தற்போது தமிழக அரசு, காமராஜர் சிலை அரசு சார்பில் 50 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவித்தது, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பராயன் கூறியதாவது: பிஏபி திட்டம் உருவாக காரணமாக இருந்தவரான, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பொள்ளாச்சியில் உருவச்சிலை அமைக்கப்படும் என, சட்டசபை கூட்டத்தொடரின்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சிறந்த தலைவர்களில் ஒருவரான காமராஜருக்கு, பொள்ளாச்சியில் சிறப்பான இடத்தில் சிலை அமைக்க வேண்டும்’’ என்றார்.

பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தலைவர் சக்திவேல் கூறியதாவது: ‘‘பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கத்தினர் மட்டுமின்றி பலரும், பொள்ளாச்சியில் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சாதி, மதம் பார்க்காத மாபெரும் தலைவர்களின் ஒருவரான காமராஜர் உருவச்சிலை, பொதுமக்கள் பார்வையில் படும்படி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

The post பிஏபி திட்டம் உருவாக காரணமாக இருந்த காமராஜருக்கு ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Tamil ,CM ,Pollachi ,
× RELATED நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை