×

வரதட்சணை நகைகளை அடமானம் வைத்து கட்டியதாக கூறி கணவரிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி விவாகரத்தான பெண் திடீர் தர்ணா

*சுவர் ஏறி குதித்து கடும் வாக்குவாதம்

ஈரோடு : ஈரோட்டில் கணவரிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி விவாகரத்தான மனைவி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, வாக்குவாம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (49). இவரது மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர்.

ரஜிதா கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். 3 மகன்களும் தந்தையுடன் உள்ளனர். ரஜிதா கடந்த சில வாரங்களுக்கு முன் கருங்கல்பாளையத்தில் உள்ள வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து கணவர் ஸ்ரீகுமார் வெளியேற வேண்டும் எனவும் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீகுமாரிடம் முறையிடுவதற்காக நேற்று காலை கருங்கல்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு ரஜிதா சென்றார்.

அப்பது ோதிடீரென வீட்டின் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ரஜிதா நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கும், எனது கணவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து ஆனது. எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோதே நான் 3 மகன்களையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றேன். அதன்பிறகு 3 மகன்களையும் அவர் ஈரோட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

இங்குள்ள வீட்டை கட்டியபோது எனது வீட்டில் இருந்து வரதட்சணையாக வழங்கப்பட்ட நகைகளை அடமானம் வைத்துதான் கட்டப்பட்டது. இந்த வீடு எனது பெயரில்தான் இருக்கிறது. வங்கி கடனில் இருப்பதால் வீட்டை ஜப்தி செய்வதற்கு வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வீட்டை விற்க முடிவு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் வீட்டை வாங்க முன்வந்தார். வங்கியில் நிலுவையில் இருந்த கடன் ரூ.18 லட்சத்தை அவரே செலுத்தினார்.

மீதமுள்ள பணத்தை வீடு பத்திரம் கிரையம் செய்யும்போது கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே வீடு மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் எனது கணவர் ஸ்ரீகுமார் வீட்டிற்கு வந்து குடியேறினார். அவருடன் வேறு ஒரு பெண்ணும் வசிக்கிறார். அந்த பெண் மின் வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். எனவே இந்த வீட்டில் இருந்து எனது கணவர் வெளியேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜிதா தர்ணா போராட்டம் நடத்தி, முன்புற இரும்பு கேட்டினை தட்டி திறக்க முற்பட்டார். ஆனால், கதவு திறக்கப்படாததால் ரஜிதா ஏணி மூலமாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பிறகு சுற்றுச்சுவர் கதவின் பூட்டை அவர் உடைத்து கதவை திறந்தார். அவருடன், வீட்டை வாங்க வந்த விஜயகுமார் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் சிலர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அங்கிருந்த ஸ்ரீகுமாரிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரஜிதா கூறுகையில், ‘‘ரூ.18 லட்சம் ஏற்கனவே வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. எனது பெயரில் இந்த வீடு இருக்கிறது. எனக்கும், எனது மகன்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும். இந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும்’’ என்றார்.

இதேபோல் ஸ்ரீகுமார் கூறுகையில், ‘‘நான் யாரிடம் இருந்தும் பணம் வாங்கவில்லை. எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்தால் போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பேன். இந்த வீடு என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. நான் மஞ்சள் காமாலை நோயால் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது என்னை மிரட்டி இந்த வீட்டை அவரது பெயரில் மாற்றி எழுதிவிட்டார். இதனால் சட்டப்படி நான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்’’ என்றார். இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post வரதட்சணை நகைகளை அடமானம் வைத்து கட்டியதாக கூறி கணவரிடம் இருந்து வீட்டை மீட்டு தரக்கோரி விவாகரத்தான பெண் திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Erode ,dharna ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...