×

அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் ‘மேலே பாஸ் இருக்கிறப்ப கீழே இருக்கிறவரிடம் எதற்கு பேசணும்’: அண்ணாமலையை டேமேஜ் செய்த எடப்பாடி

மதுரை: பாஜவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு, ‘மேலே பாஸ் இருக்கிறப்ப… கீழே இருக்கிறவரிடம் எதற்கு பேசவேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி அளித்தார். விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறிய பிறகும், ஓபிஎஸ் அதிமுக கொடியையும், இரட்டை இலையையும் பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இதுகுறித்து நிர்வாகிகள் குழு கூடி தகுந்த முடிவெடுக்கும். பாஜவுடன் கூட்டணியை தொடர்கிறோம்…’’ என்று கூறிய போது, நிருபர்கள் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘அவரைப்பற்றி கேட்காதீர்கள். பலமுறை கூறி விட்டேன். கூட்டணியை நிர்ணயிக்கக்கூடியவர்கள் டெல்லியில் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ெதாகுதி பங்கீடு குறித்து நிர்ணயிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் தான் பாஜவின் பொறுப்பாளர்கள். அவர்களிடம் தான் நாங்கள் பேசி கொண்டிருக்கிறோம். மேலே பாஸ் இருக்கிற போது, கீழே இருக்கிறவரிடம் எதற்கு பேச வேண்டும். கீழே மாறிக்கொண்டே இருப்பார்கள். முன்பு தமிழிசை இருந்தார். அவர் ஆளுநராக போய் விட்டார். அதற்கடுத்து முருகன் வந்தார். அவர் அமைச்சராகி விட்டார். இப்போது அடுத்தவர் வந்துள்ளார். அதற்கடுத்து யார் வருவார்; யார் போவார் என்பது தெரியாது.

அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி என்றால் பிரதமர் தான். 2019, 2021ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் டெல்லி தலைவர்களுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். இங்குள்ள மாநிலத்தலைவரிடம் பேசவில்லை. அப்போதும் பேசவில்லை. மாநிலத்தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். தயவுசெய்து மீண்டும், மீண்டும் அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’’ என்றார். கூட்டணி தொடர்பாக அண்ணாமலை- எடப்பாடிக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் சூழலில், ‘மேலே பாஸ் இருக்கிறப்ப கீழே இருக்கிறவரிடம் எதற்கு பேசணும்’ என்று அண்ணாமலையை மீண்டும் எடப்பாடி டேமேஜ் செய்து உள்ளார்.

கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று டெல்லி பாஜ மேலிடம் சொன்னாலும், தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோஷத்தை அண்ணாமலை எழுப்பி வருகிறார். இதுதொடர்பாக அண்ணாமலை மீது அமித்ஷாவிடம் எடப்பாடி புகார் அளித்து உள்ளார். அவ்வப்போது எடப்பாடியை சீண்டும் வகையில் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். நாளை மறுநாள் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி டெல்லி செல்ல உள்ள நிலையில், அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே இல்லை என்ற ரீதியில், பாஸ்கிட்டதான் நாங்கள் பேசுவோம் என்று எடப்பாடி கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அண்ணாமலை பெயரை தவிர்க்கும் எடப்பாடி

சமீப நாட்களாக அண்ணாமலை என்ற பெயரை கேட்டாலே எடப்பாடி கடுப்பாகி வருகிறார். இதனால், அண்ணாமலை என்ற பெயரையே அவர் உச்சரிப்பதில்லை. நேற்றும் மதுரை விமானநிலையத்தில் நிருபர்களை சந்தித்தபோது, ஒரு தடவை கூட தவறியும் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை பெயரை எடப்பாடி பழனிசாமி குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் ‘மேலே பாஸ் இருக்கிறப்ப கீழே இருக்கிறவரிடம் எதற்கு பேசணும்’: அண்ணாமலையை டேமேஜ் செய்த எடப்பாடி appeared first on Dinakaran.

Tags : Etapadi ,Annamalayas ,Madurai ,Baja ,Edabadi Palanisamy ,Baja Alliance ,Annamalai Damage ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை