×

12ம் வகுப்பு இயற்பியல், உயிரியல் தேர்வு கடினம் தமிழக மாணவர்களுக்கு நீதி கேட்டு சிபிஎஸ்இ ஆணையருக்கு மீண்டும் கடிதம்: சு.வெங்கடேசன் எம்.பி தகவல்

மதுரை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு இயற்பியல், உயிரியல் பாடத்தேர்வு கடினமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீதி வழங்கும்படி தேர்வு ஆணையருக்கு வெங்கடேசன் எம்.பி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் சார்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தமிழ்நாடு மண்டலத்திலான வினாத்தாளில் இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் மிகக்கடினமாக இருந்தன.

இது மாணவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. இதுபற்றி பெற்றோர்களும் முறையிட்டனர். இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன், சிபிஎஸ்இ தேர்வுத்துறை ஆணையருக்கு கடந்த மார்ச் 20ல் கடிதம் எழுதினார். இதற்கு , சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் எழுதிய பதில் கடிதத்தில், ‘‘சிபிஎஸ்இ வசம் இதுபோன்ற மாணவர் குறைகளை தீர்க்க செயலாக்கம் உள்ள உள் கட்டமைப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாட நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியே முடிவெடுக்க முடியும்’’ என்று பதில் தரப்பட்டது.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ.யின் பதில் பொத்தாம்பொதுவாக உள்ளது. குறிப்பிட்ட பிரச்னை இந்த செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? இதன் மீது பாட நிபுணர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதா என்ற விபரங்கள் இல்லை. பல பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றை தேர்வு என்று நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு, ஒரே பாடத்திட்டத்திற்கு (சிபிஎஸ்இ) பல கேள்வித்தாள்கள் என்பது முரண்பாடு அல்லவா. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்து, மீண்டும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

The post 12ம் வகுப்பு இயற்பியல், உயிரியல் தேர்வு கடினம் தமிழக மாணவர்களுக்கு நீதி கேட்டு சிபிஎஸ்இ ஆணையருக்கு மீண்டும் கடிதம்: சு.வெங்கடேசன் எம்.பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Venkatesan M. B ,Madurai ,CPSE ,CBSE ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...