×

மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருஞானசம்பந்தரின் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை அருகேயுள்ள திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் தமிழ்நாடு அரசின் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்க திட்டப்பணி குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில் இருந்த தங்க ஏடு ஒன்றும், கோயில் வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஒரு சுவடிக்கட்டும் கண்டறிந்தனர். இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 45,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டயங்கள் உள்ளனவா என்பது குறித்து இதுவரை 200க்கும் அதிகமான கோயில்களில் களஆய்வு செய்து முடித்துள்ளோம்.

மதுரையின் வடக்கே வைகை நதிக்கரையில் அமைந்துள்ள திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் கள ஆய்வாளர்கள் கோ.விசுவநாதன், மா.பாலசுப்பிரமணியன் கள ஆய்வு செய்தனர். அப்போது தங்கத்தால் செய்யப்பட்ட தங்க ஏடு ஒன்று மற்றும் கோயில் வரவு, செலவு விபரம் அடங்கிய ஓலைச்சுவடி கட்டு ஒன்றை கண்டறிந்தனர். தங்க ஏட்டில் திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் எழுதப்பட்டுள்ளது. இலக்கியப்பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.இந்த தங்க ஏடு தோற்றப்பாடுக்குப்பின் உள்ள வரலாற்றை திருவேடகநாதர் கோயில் தல புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.சுவடியிலுள்ள எழுத்தமைதி மூலம் ஏடு எழுதப்பட்ட காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். இவ்வாறு கூறினார்.

The post மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருஞானசம்பந்தரின் பாடல் பதிந்த தங்க ஏடு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Thiruvedakam Edakanathar temple ,Madurai ,Tamil Nadu government ,Tiruvedakam Etakanathar temple ,Tirunnasambandar ,Tiruvedakam ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு