×
Saravana Stores

பாளை. மறைமாவட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு சேவியர்ஸ் கல்லூரியில் பெண்கள் மாநாடு

நெல்லை: பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் அமைச்சர் கீதாஜீவன், அப்துல்வஹாப் எம்எல்ஏ மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை மறைமாவட்டம் சார்பில் இந்தாண்டு பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக பாளை மறைமாவட்டத்தில் பெண்கள் மாநாடு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அந்தவகையில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாளை. தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் பெண்கள் மாநாடு கோலாகலமாக நடந்தது.

பாளை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போப் பிரான்சிஸ் அரங்கில் நடந்த இம்மாநாட்டிற்கு மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ வாழ்த்திப் பேசினார். பெண்களின் நலவாழ்வே திருஅகவையின் நிறைவு வாழ்வு என்ற மையத்தின் சிறப்பு செய்தியை தேசிய செயலாளரான மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த அருட்சகோதரி லிட்வின் விளக்கிப் பேசினார். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயம், விலங்குகளின் பாதுகாப்பு குறித்து விருதுபெற்ற அறிவியல் அறிஞர் கோமதி சிறப்புரை ஆற்றினார். இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

திருஅவையிலும், சமூகத்திலும் பெண்களின் தலைமைத்துவம் குறித்து பாளை மறை மாவட்ட பெண்கள் பணிக்குழு செயலாளர் அமலி அமலதாஸ் விளக்கிக் கூறினார். மாநாட்டையொட்டி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பல பங்குகளில் இருந்து குழுக்களாகப் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று நிகழ்த்திய ஏராளமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதே போல் மாநாட்டுப் பாடல்களும், விழிப்புணர்வு பாடல்களும் எழுச்சியாக அமைந்தன. மாநாட்டு நிகழ்ச்சிகளை ஜனதா, ஸ்டெல்லா ஒருங்கிணைத்து வழங்கினர். விழாவில் தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் வாழ்த்திப் பேசினார். ஏற்பாடுகளை பாளை மறைமாவட்ட பெண்கள் பணிக்குழுவின் செயலாளரான அமலி அமலதாஸ் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.

The post பாளை. மறைமாவட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு சேவியர்ஸ் கல்லூரியில் பெண்கள் மாநாடு appeared first on Dinakaran.

Tags : Palai. Women's Conference ,Xavier's College ,Diocesan Golden Jubilee Year ,Nellai ,golden jubilee ,Palayamgottai ,Diocese ,Thuya Saveriar Autonomous College ,Dinakaran ,
× RELATED தேசிய அளவில் சிறந்த கலை, அறிவியல்...