×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12,500 ஆடுகள் விற்பனை: களைகட்டிய புளியந்தோப்பு ஆடுதொட்டி

பெரம்பூர்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புளியந்தோப்பு ஆடுதொட்டியில் 12,500 ஆடுகள் விற்கப்பட்டன. ரம்ஜான் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரியாணிதான். இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் ஆட்டு இறைச்சி வாங்கி பிரியாணி செய்து, அதனை நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னையில் மிகப்பெரியதாக கருதப்படும் புளியந்தோப்பு ஆடுதொட்டியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக ஆடுகளின் விற்பனை களைகட்டியது. இந்த இறைச்சி கூடத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 2,000 ஆடுகள் வரை வெட்டப்பட்டு இறைச்சிகள் விற்பனையாகும். தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12,500 ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சிகள் விற்பனையாகி உள்ளன.

இதற்காக ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் கடந்த சில நாட்களாக வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை விற்பனை நடைபெற்றது. ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.700 முதல் ரூ.750 வரை விற்கப்பட்டது. சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம், முடிச்சூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டு இறைச்சி கடைக்காரர்கள் இங்கு வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12,500 ஆடுகள் விற்பனை: களைகட்டிய புளியந்தோப்பு ஆடுதொட்டி appeared first on Dinakaran.

Tags : Ramzan Festival ,Perambur ,Pulianthoppu ,Ramzan ,Ramadan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!.