குன்றத்தூர்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி (38). இவர் பூந்தமல்லியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கடையில் வெல்டராக பணியாற்றினார். மலையம்பாக்கத்தில் உள்ள புளியந்தோப்பில் நண்பருடன் அமர்ந்து அந்தோணி மது அருந்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் வந்த 2 பேர், அந்தோணியிடம் சென்று, ‘’தங்களுக்கு ஓசியில் மது வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்தோணி, ‘’நாங்களே உடல்வலி தீருவதற்காக மது அருந்துகிறோம். அதிலும் ஓசி கேட்கிறாயே’ மது தர முடியாது’’ என்று கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தி கேட்க கொஞ்சமாக மது ஊற்றி கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் மது வேண்டும் என்று அந்தோணியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு முற்றியதில் 2 மர்ம நபர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அந்தோணியை சரமாரியாக வெட்டினர். இவர்களிடம் இருந்து அந்தோணியும் அவரது நண்பரும் தப்பியோடியபோது விரட்டி சென்று அந்தோணியை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
அந்தோணியின் முகம், காது, வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து படுகாயம் அடைந்த அந்தோணியை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post மாங்காடு அருகே பரபரப்பு; ஓசியில் மது தர மறுத்ததால் வெல்டருக்கு சரமாரி வெட்டு: 2 பேருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.