×

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 23 வெளி மாநிலத்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை

 

ஊட்டி, ஏப். 22: தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உட்பட 18 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் கல் உடைப்பவர்கள், கல் வெட்டுபவர்கள், கல் பொடி செய்பவர்கள், கம்பி வளைப்பவர், சாலையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுவோர் என 53 வகையான கட்டுமான தொழில் புரிவோர் பதிவு செய்யப்படுகின்றனர். நல வாரியத்தில் பதியப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்படுகின்றனர். இதற்கான சிறப்பு பதிவு முகாம் ஊட்டியில் உள்ள நிர்மலா துவக்க பள்ளி மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் தலைமை வகித்தார். இரு நாட்கள் நடந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நல வாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளர்களது ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்ைட, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிச்சான்று போன்றவை தேவை. உரிய ஆவணங்கள் வைத்திருந்த 23 தொழிலாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நல வாரியத்தில் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் இணைய விரும்பினால் 274டி, ஸ்டேட் பேங்க் லைன், ஊட்டி என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2448524 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

The post கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 23 வெளி மாநிலத்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Construction Labor Welfare Board ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...