×

கோடை விடுமுறை தொடங்குவதால் நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் 380 மற்றும் ஊரணி, குளங்கள் (சிறிய நீர் நிலைகள்) 2112 உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இந்நிலையில், விடுமுறை காலங்களில் மாணவர்கள் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் ஆழம் தெரியாத நீர்நிலைகள் மற்றும் பயன்பாடு இல்லாத கல்குவாரிகளின் நீர்தேக்கங்களில் குளிக்கச் செல்பவர்களும், கிணறு, குட்டை போன்ற நீர் நிலைகளில் கை, கால் கழுவ மற்றும் குளிக்க செல்பவர்களும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த நெல்வாய் கிராமத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் அண்ணன், தங்கை வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர் பார்க்க சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் ஏரியில் கை, கால் கழுவ சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் மாணவர்கள் அதிக அளவில் நண்பர்களுடன் குளிக்கச் செல்வார்கள். நண்பர்களுடன் உற்சாகத்துடன் குளிக்கும்போது கவனக்குறைவாக பாதுகாப்பை மறந்து விடுகின்றனர். இதனால், ஏற்படும் உயிரிழப்புகளால் பெரும் சோகம் ஏற்படுகிறது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரணம் விளைவிக்கும் நீர்நிலைகளை அடையாளம் கண்டு ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நீர்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

The post கோடை விடுமுறை தொடங்குவதால் நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Public Works Department ,Water Resources ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...