×

சமூகநீதி போராளி

சமூக ஜனநாயகத்தின் அடித்தளம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது என்றார் அம்பேத்கர். அப்படியான சமூக ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தினார் அம்பேத்கர். அதில், இரும்பு கோட்டையை உருவாக்கி அரணாக நின்றவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங். மத்தியில், வெறும் 11 மாதங்களே ஆட்சியில் இருந்தாலும் மக்களாட்சி என்ற வார்த்தைக்கு இந்திய அரசியல் அகராதியில் அர்த்தம் தந்தவர் வி.பி.சிங். அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் ஏராளம். இன்றைய இளம் தலைமுறையினர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சமூக அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்து, அதன்வழி மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவீத இடஒதுக்கீடுக்கான கோரிக்கையை நிறைவேற்றினார்.மாணவர் அமைப்புகள் மண்டல் கமிஷனை எதிர்த்து போராட்டம் நடத்தின. இதில், கொடுமையான விஷயம் என்னவென்றால், யாருடைய உரிமைக்காக வி.பி.சிங் போராடிக்கொண்டிருந்தாரோ, அதே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வைத்தே போராட்டம் நடைபெற்றது. தவறான தூண்டுதலில் உயிர் இழப்பும் ஏற்பட்டது. முடிவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சமூக நீதிக்காக போராடிய ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார்.

பாபர் மசூதி இடிப்பின்போது அமைதிக்காக உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, மதவாத கும்பல் இவரது அருகில் உணவு உண்ணும் போராட்டம் ஒன்றை நடத்தியது. அதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த தண்ணீரும் அருந்துவதில்லை என்று முடிவு செய்தார். போராட்டத்தின் நாட்கள் அதிகரிக்க, மக்களின் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று தொடங்கிய சிறுநீரக கோளாறு, இறுதியில் அவரது உயிரையே பறித்தது. நல்ல அரசியல் தலைவராக இருந்த வி.பி.சிங், சிறந்த ஓவியராகவும், கவிஞராகவும் இருந்தார்.

இவரது தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதை புத்தகமான `ஒரு துளி பூமி, ஒரு துளி வானம்’ என்ற நூல் சமத்துவ சிந்தனைகளை தூண்டியது. கடைசியாக, இவரது பதவி பறிபோகும்போது “இது உங்கள் கடைசி நாள் அல்லவா..? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அவர், ‘அரசியல் நாள்காட்டியில் கடைசி நாள் என்பதே இல்லை’ என பதிலளித்தார். தமிழகத்தை பொறுத்தவரை, தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார். பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார். கலைஞரை தனது சொந்த சகோதரனைப்போல் பாவித்தார்.

ஒடுக்கப்படுகிற மக்களுக்காகவும், சமூக நீதிக்காவும் வாழ்வின் இறுதிவரை போராடினார். இன்று ஒடுக்கப்படுகிற, பிற்படுத்தப்படுகிற மக்களின் பெயருக்கு பின்னால், கல்வி பட்டங்கள் இருக்கிறது என்றால், அதற்கு வி.பி.சிங் தியாகம் முக்கிய காரணம் ஆகும். அப்படிப்பட்ட தியாக தலைவனுக்கு சென்னையில் முழு உருவச்சிலை எடுக்கிறார் திராவிட மாடல் ஆட்சியின் கதாநாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்திய அரசியல் வரலாற்றில் வி.பி.சிங் பெயர் எப்படி நிலைக்கிறதோ, அப்படியே அவருக்கு சிலை எடுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரும் நிலைக்கும்.

The post சமூகநீதி போராளி appeared first on Dinakaran.

Tags : ambetkar ,
× RELATED ஆர்.பி.வி.எஸ். மணியன் மீண்டும் மன்னிப்பு கோரினார்