×

கொடைக்கானலில் சாலை நடுவே ‘ஸ்டிரைக்’ செய்த காட்டு மாடுகள்

 

*பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஓட்டம்

*ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் வத்தலக்குண்டு சாலை நடுவே காட்டு மாடுகள் மறித்து நின்றதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஒலி சத்தம் கேட்டு காட்டு மாடுகள் மிரண்டு ஓடியதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.கொடைக்கானல் நகரில் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் காட்டு மாடுகள் உலா வருவது தொடர் கதையாகி உள்ளது. காட்டு மாடுகள் தாக்கி பலர் காயம் அடைந்துள்ளதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் மூஞ்சிக்கல் அருகே காட்டு மாடுகள் கூட்டம் உலா வந்தன.

வாகனங்களில் ஒலி சத்தம் கேட்டு காட்டு மாடுகள் அங்குமிங்கும் மிரண்டு ஓடின. இதனால் பள்ளி- கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து அலறியடித்து ஓடினர். தொடர்ந்து வெகுநேரம் காட்டு மாடுகள் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் சாலையிலே நின்றன. மேலும் அங்கிருந்த சில டூவீலர்களை தள்ளி விட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு மாடுகளை அருகிலுள்ள தனியார் தோட்டத்திற்குள் விரட்டினர். காட்டு மாடுகள் சாலையில் வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன், நகருக்குள் வர விடாமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் சாலை நடுவே ‘ஸ்டிரைக்’ செய்த காட்டு மாடுகள் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Vattalakundu ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...