×

ஆணையர் அறிவிப்பு காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணி

காரைக்கால், ஏப்.21: காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத்தில் மண் நிரப்பி சமன்படுத்தும் பணியை மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில், ஒன்றிய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்டு நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

சுமார் 13 ஆண்டுகளாக பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாத நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக திருநள்ளாறு பூமங்கலம் கிராமத்தில் உள்ள திருநள்ளாறு தேவஸ்தானத்திற்கு சொந்தமான வயல் பகுதி தேர்வு செய்து கட்டிடம் கட்டுவதற்கு 3.50 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி கட்டிடம் அமைய உள்ள பகுதி வயல்பரப்பு என்பதால் மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மண் நிரப்பி சமன்செய்து தருமாறு மத்திய பொதுப்பணித்துறையினர் புதுச்சேரி அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைஅடுத்து மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி பரிந்துரையின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சத்து 80 ஆயிரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நல்லம்பல் ஏரியை தண்ணீர் சேமிப்பதற்காக ஆழப்படுத்தும் பணியும் அவ்வாறு எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி இடத்தினை சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று பூமங்கலம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் வீரசெல்வம், சந்திரசேகர், புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ராஜசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கிராமமக்கள் திடீர் போராட்டம்: இதனிடையே பூமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி கட்டிடம் கட்டுவதில் பாதிப்பு ஏற்படுவதாக கூறி எம்.பி செல்வகணபதி கார் முன்பு தரையில் படுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அரசு மூலம் எந்த ஒரு தகவலும், தெரிவிக்காமல் திடீரென இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் கொண்டு நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு முன்னர் வந்து கொடிகளை நடுகின்றனர்.

மேலும் பள்ளி கட்டிடம் விரிவாக்கத்தால் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு சமுதாய கூடத்தை இடிக்க முற்படுகின்றனர். மேலும் பள்ளி கட்டிடம் கட்டுமானத்திற்கு எங்கள் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இன்று வரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மூலம் எந்த ஒரு கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

The post ஆணையர் அறிவிப்பு காரைக்காலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணி appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalaya School Building ,Karaikal ,Kendriya Vidyalaya School ,Commission ,Dinakaran ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...