×

15 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ₹31 கோடியில் திட்டப்பணிகள்

கிருஷ்ணகிரி, ஏப்.21: வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், ₹31 கோடி மதிப்பில் 15 ஊராட்சிகளில் உள்ள 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்ட பணிகள், வருகிற மே மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளுக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், தற்போது சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் உள்ள 122 குடியிருப்புகளுக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க, ₹31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ₹79 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே, 6 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 5 நீர் உறிஞ்சு கிணறுகள், ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல், 3.50 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது. இந்த கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கடிதம் அளித்துள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்தால், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் உள்ள எண்ணேகொள்புதூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள 122 குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தடையில்லா குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இந்த திட்டப் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
வேப்பனஹள்ளி ஒன்றியத்தை சேர்ந்த 15 ஊராட்சிகளில் உள்ள எண்ணேகொள் உள்ளிட்ட 122 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ₹31 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. ஆண்டு பராமரிப்பு செலவாக ₹79.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்ககும் பணிகளில், மீதமுள்ள பணிகள் கே.ஆர்.பி.அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விரைவில் துவங்கப்படவுள்ளது. தற்போது 1.80 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்றும் அறையின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்நீரேற்று நிலையத்திலிருந்து நீர் உந்தப்பட்டு, எண்ணேகொள் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள 5.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் நீர் சேகரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பேட்டப்பனூர், சோமநாதபுரம், மாரசந்திரம், கதிரிப்பள்ளி, நரசப்பன்கொட்டாய், கொரல்தொட்டி, சின்னகொத்தூர், மணவாரனப்பள்ளி ஆகிய இடங்களில், புதியதாக கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் சேமிக்கப்படுகிறது. இதற்கான நீரேற்றும் குழாய், பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில், மொத்தம் 58 மின் மோட்டார்களில் 30 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 மின் மோட்டார்கள் பொருத்தும் பணி 94 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் முழுவதும் வருகிற மே 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post 15 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ₹31 கோடியில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Veppanahalli ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு