×

கொடநாடு கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது எடப்பாடிக்கு நெருக்கமான டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தகவல்

சென்னை: கொடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியிடம் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி கனகராஜ் வீட்டில், கோவை சிபிசிஐடி போலீசார் நேற்று நடத்திய சோதனையில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது கொடநாடு பங்களாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்து விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனது. அப்போது, கொள்ளையர்களை தடுக்க முயன்ற மற்றொரு காவலாளி கிருஷ்ண தபா காயமடைந்தார்.இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தனது மனைவியுடன் காரில் செல்லும்போது சாலை விபத்தில் இறந்தார். அதைதொடர்ந்து கேரள கூலிப்படை தலைவன் சயான் தலைமையில் 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை நடத்தினர். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மேலும், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. அப்போதுதான், கொலையில் அதிமுக முக்கிய பிரமுர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்கு விசாரணை, அதிரடியாக கோவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொள்ளை, கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அதிமுகவின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

அவருக்கு மிகவும் பாதுகாப்பு அதிகாரி மற்றும் நம்பிக்கைக்குரியவராக டிஎஸ்பி கனகராஜ் இருந்தார். அவருக்கும் கொலை வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், தலைமையிலான போலீசார் சென்னை மந்தைவெளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, வழக்கு தொடர்பாகவும், கொள்ளை நடந்தபோது வைத்திருந்த வங்கி கணக்கு விபரங்களை பெற்று, டிஎஸ்பி கனகராஜூடம் விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் தொடர் சோதனைக்கு பிறகு, சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி வீட்டில் சிக்கிய ஆவணங்களை எடுத்துசென்றனர். டிஎஸ்பி கனகராஜ் கூறிய பதிலை அதிகாரிகள் பதிவு செய்தனர். கனகராஜ் தற்போது ஆவடி ஆயுதப்படை உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

The post கொடநாடு கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது எடப்பாடிக்கு நெருக்கமான டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,CPCID ,DSP ,Kanakaraj ,Edapadi ,Chennai ,Edapadi Palanisami ,Kadanadu ,CbCID ,Edapati ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...