×

காஷ்மீரில் பரபரப்பு, விமான வடிவ பலூன் பறிமுதல்; உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமத்தில் விமானத்தின் வடிவில் பலூன் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பலூனை போலீசார் கைப்பற்றினர். அது உளவு பலூனா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள், தாங்கள் எதிரியாக கருதும் நாடுகளை உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

பலூனின் அடியில் ஒரு கேமராவை கட்டிவிட்டு காற்றின் ஓட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் பறக்கவிட்டு உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அதிக உயரத்தில் பறப்பதால் இது யாருடைய கண்ணிலும் படாமல் இருக்கும். மேலும் சூரிய சக்தியை கொண்டு உளவு பார்க்க பயன்படுத்தும் பொருட்கள் இயங்கும் வகையில் இருக்கும். இதனால் தற்போதைய காலத்தில் உளவு பார்க்க பலூன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன் பறந்ததாக கூறப்பட்டது. அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியான மொன்டானாவில் உள்ள விமான படை தளத்தின் மீது பறந்து ராணுவ விவகாரங்களை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ராரா எனும் கிராமம் உள்ளது.

இங்குள்ள கோயில் அருகே நேற்று பலூன் ஒன்று கிடந்தது. அந்த பலூன் விமானத்தின் வடிவில் இருந்தது. பலூனில் பிஎச்என், எமிரேட்ஸ் என எழுதப்பட்டிருந்தது. உடனடியாக சம்பா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்த பலூனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பலூன் எப்படி அங்கு வந்தது, வெளிநாட்டில் இருந்து அது உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? என்பது பற்றிய எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை.

இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் பலூன் கைப்பற்றப்பட்ட ராரா கிராமம் என்பது சர்வதேச எல்லையில் இருந்து 8 கிமீ தொலைவில் தான் உள்ளது. இதனால்தான் இந்த விஷயத்தில் போலீசார் அதிக கவனம் கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் பலூன் பற்றிய முக்கிய விபரங்களை போலீசார் கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post காஷ்மீரில் பரபரப்பு, விமான வடிவ பலூன் பறிமுதல்; உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu and ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...