×

ஓடும் பேருந்தில் நகை திருட்டுஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் கைது

வடலூர், ஏப். 20: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருடிய 2 ெபண்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் அருகே ராமாபுரம் மேற்கு வடக்கு தெருவை சேர்ந்தவர் கமல்ராஜ் மனைவி நிர்மலா(26). சம்பவத்தன்று இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள அடகு கடையில் ஒரு பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு பேருந்தில் வந்துள்ளார். கூட்டமாக இருந்ததால் தான் வைத்திருந்த கை பையை கீழே வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார் அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்று பின்னர் புறப்பட்டபோது உட்காருவதற்கு இடம் கிடைத்தவுடன் சீட்டில் அமர்ந்து கொண்டு தனது பையை தேடி பார்த்துள்ளார். ஆனால் பையை காணாமல் அதிர்ச்சி அடைந்த நிர்மலா சத்தம் போட்டார். தனது நகை திருட்டு போனது குறித்து பேருந்து டிரைவர், நடத்துநரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது நிர்மலாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து பொதுமக்கள் விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அந்த பெண்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்ததில் நிர்மலாவின் கைப்பை இருந்தது தெரியவந்தது. பின்னர் இரண்டு பெண்களையும் பயணிகள் பிடித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெற்றிவேல் மனைவி பாண்டிச்செல்வி (25), ராஜா மனைவி துர்கா (22) என தெரியவந்தது. இவர்கள் புதுச்சேரி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கோவில்கள், திருமண சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்துகள், பொது இடங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர். இதையடுத்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் மீது சென்னை, தாம்பரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் துர்காவிற்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. பாண்டிச்செல்வி ஐந்து மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.

The post ஓடும் பேருந்தில் நகை திருட்டு
ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் கைது
appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Vadalore ,Cuddalore ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...