×

வேடசந்தூர் நாகம்பட்டியில் அச்சுறுத்தும் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேடசந்தூர் அருகே நாகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டநாகம்பட்டி மற்றும் புதூரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய கடந்த 2012ல் கோட்டூர்-சீத்தமர நால்ரோடு சாலையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அதன்பின் குடிநீர் ெதாட்டியில் உரிய பராமரிப்பு பணிகள் செயல்படவில்லை. இதனால் தற்போது, குடிநீர் தொட்டியின் கான்கிரீட் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதன் காரணமாக குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு இந்த குடிநீர் தொட்டியை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் தங்கவேலிடம் கேட்டபோது கூறியதாவது: குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் பராமத்து பணி செய்ய அனுமதி அளித்தனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மராமத்து பணிக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டும் ஒப்பந்ததாரர்கள் யாரும் ஏலம் எடுக்க வராததால் அப்படியே நிலுவையில் வைத்துள்ளோம். இதுகுறித்து மீண்டும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.

The post வேடசந்தூர் நாகம்பட்டியில் அச்சுறுத்தும் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vedasanthur Nagampatti ,Vedasanthur ,Nagampatti ,Vedasantur ,Nagambatti ,Dinakaran ,
× RELATED தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு