×

பூமி பூஜையுடன் நின்று போன பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி துவக்கம்

சிவகாசி: தினகரன் செய்தி எதிரொலியால் சிவகாசி அருகே தெற்குஆனைக்குட்டம் கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சிவகாசி அருகே தெற்குஆனைக்குட்டம் கிராமத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் டான்பாமா (பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள்) சங்கம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்ெபாருள் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஜன.10ல் கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சக இயக்குனர் பிரகாஷ் மிஸ்ரா, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆகியோர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து ெகாண்டனர். டான்பாமா சங்கத் தலைவர் கணேசன், துணை தலைவர்கள் ராஜரத்தினம், அபிரூபன், பொதுசெயலாளர் பாலாஜி, பொருளாளர் சீனிவாசன், நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு ஆகியோர் பூமி பூஜை நடத்தினர். அப்போது, ‘பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிடம் 5 ஏக்கர் பரப்பில் அமையவுள்ளது.

இங்கு அனைத்து ஆய்வக வசதிகளும் ஏற்படுத்தப்படும். பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் ஆராய்ச்சி பணி இங்கு நடைபெறும். பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசில் புகை மாசு குறைக்கப்படும். இந்த ஆராய்ச்சி மையம் பசுமை பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலகைளுக்கு சான்றிதழ் வழங்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டு 3 மாதங்களில் முடிக்கப்படும்’ என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் பூமி பூஜையுடன் ஆராய்ச்சி ைமய பணி கடந்த 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இங்கு நடப்பட்ட அடிக்கல்லும் அகற்றப்பட்டிருந்தது. பூமி பூஜையில் கலந்து கொண்ட நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு அப்போது கூறுகையில், ‘சிவகாசியில் அமைய உள்ள ஆராய்ச்சி மைய கட்டிடத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கெமிக்கல் ஆலை, மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கபடும். இதே போல் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த முடியும்.

புகை மாசில்லா பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் ெபரிதும் உறுதுணையாக இருக்கும். சிவகாசியில் உள்ள 950 பட்டாசு ஆலைகள் நீரியில் பதிவு செய்துள்ளது. இந்த ஆலைகளுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மைய கட்டிட பணிகள் மார்ச், 2023 க்குள் கட்டி முடிக்கப்படும்’ என தெரிவித்தார். ஆனால் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக துவங்க படாமல் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணி துவக்கப்பட்டுள்ளது. அடிக்கல் கல்தூண் மீண்டும் நடப்பட்டுள்ளது. இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘ஆராய்ச்சி மைய கட்டிட பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தற்காலிகமாக ஆராய்ச்சி மையம் துவங்க பட்டது. இங்கு ஆய்வகம், பரிசோதனை கூடம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆராய்ச்சி மையத்திற்கு நிரந்தர புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. சில மாதங்களில் பணிகள் முடிந்து நிரந்தர ஆராய்ச்சி மையம் செயல்பாட்டுக்கு வரும்’ என்றார்.

The post பூமி பூஜையுடன் நின்று போன பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Fireworks research center ,Bhumi Puja ,Sivakasi ,South Anaikuttam ,Dinakaran ,
× RELATED விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை