×

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி தொகை தேர்வில் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சாதனை

நாகப்பட்டினம்,ஏப்.19: தொடர்ந்து ஆறாவது ஆண்டாக என்எம்எம்எஸ் தேர்வில் நாகப்பட்டினம் நெல்லுக்கடைத் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு மாணவன் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்த தேர்வு பயன்படுகிறது.

இதன் மூலம் இடைநிற்றலின்றி கல்வியை தொடர அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆண்டுதோறும் இந்த தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரும் ரூ.50 தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் 12 மையங்களில் இருந்து தேர்வை எழுதினர். நாகப்பட்டினம் நெல்லுக்கடை தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இதுவரை இந்த பள்ளியில் இருந்து 14 மாணவர்கள் வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு நடந்த தேர்விற்கான முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் நாகப்பட்டினம் நெல்லுக்கடை தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த போத்திராஜன் தேர்ச்சி பெற்று கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவன் போத்திராஜ், பயிற்சி அளித்த ஆசிரியர் சிவசங்கரி ஆகியோரை தலைமை ஆசிரியர் சகாயஜோசப்ராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

The post தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி தொகை தேர்வில் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nellukadadi Street Municipal Middle School ,NMMS ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை