×

சாத்தான்குளம் தேரி பகுதியில்கனிமவள தொழிற்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?பட்டதாரி இளைஞர்கள் எதிர்பார்ப்பு

சாத்தான்குளம், ஏப். 19: சாத்தான்குளம் தேரி பகுதியில் மாநில மற்றும் ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ₹1,500 கோடியில் தொழிற்சாலை அமைய இருப்பது பட்டதாரி இளைஞர்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை பணிகள் எப்போதும் தொடங்கும் என அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் கிணறு மற்றும் குளத்து பாசனம் மூலம் நடந்து வரும் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் இப்பகுதி மழை மறைவு பிரதேசமாக மாறி வருவதால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கனிமவளங்களை கொண்ட தேரி பகுதி, சாத்தான்குளத்தில் அதிகமாக உள்ளது.

இந்த தேரி பகுதியில் சில இடங்களில் முருங்கை, தென்னை பயிரிடப்பட்டு விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதி மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் தொழிற்சாலை எதுவும் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாத்தான்குளம் பகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசின் ஐஆர்இஎல் (இந்தியா) நிறுவனத்துடன் சாத்தான்குளம் தேரி மற்றும் கடலோர பகுதியில் சுமார் ₹1500 கோடியில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் தொழிற்சாலை உள்ளதால், இப்பகுதியில் புதிய தொழிற்சாலை அமைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது. இது இப்பகுதி இளைஞர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலமுருகன் கூறுகையில்,‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாத்தான்குளம் பகுதியை வளம் மிக்க பகுதியாக மாற்றும் நோக்கில் தொழிற்சாலை அமைய நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனையே பட்டதாரி இளைஞர்களும் எதிர்பார்க்கின்றனர். இங்கு தொழிற்சாலை அமைந்தால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் என சில விவசாயிகள் அச்சம் தெரிவித்ததாக தெரிகிறது. சாத்தான்குளம் தேரி பகுதியில் விவசாயம் அல்லாத பகுதிகள் ஏராளமாக உள்ளன. தொழிற்சாலை அமைய விவசாய அல்லாத பகுதியையே தேர்வு செய்யும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை. இந்த தொழிற்சாலை சாத்தான்குளம் பகுதியில் அமையும் பட்சத்தில் செல்வ செழிப்பான பகுதியாக மாறும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

‘‘உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவரும், சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான லூர்துமணி கூறுகையில், ‘சாத்தான்குளம் பகுதியில் மழை இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பரிதவிக்கும் நிலையில் உள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் தொழிலை விட்டு வெளியூர்களுக்கு செல்லும் நிலையிலேயே உள்ளனர். விவசாயம் இப்பகுதியை தூக்கி நிறுத்தியிருந்தாலும், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் தொழிற்சாலை இல்லாதது பெரும் குறையாக உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தேரி பகுதியில் மறைந்துள்ள கனிமவளங்களை பிரித்து எடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் மாசுப்படாத வகையில் தொழிற்சாலை கொண்டு வர உள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் வேலை வாய்ப்பில் வட மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

The post சாத்தான்குளம் தேரி பகுதியில்
கனிமவள தொழிற்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
பட்டதாரி இளைஞர்கள் எதிர்பார்ப்பு
appeared first on Dinakaran.

Tags : Satankulam Theri ,Satankulam ,Chatankulam Theri ,Dinakaran ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா