×

துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு டெல்லி விமான நிலையத்தில் ரவுடி வெள்ளைசுந்தர் கைது: வங்கி கணக்கு மூலம் பிடித்தது தனிப்படை

நெல்லை: பிரபல ரவுடி வெள்ளை சுந்தரை டெல்லி விமான நிலையத்தில் நெல்லை தனிப்படை போலீஸ் கைது செய்தது. நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கோபிகுமார். இவரது மகன் அஜய்கோபி. இவர்களது உறவினர் ரவுடி வெள்ளைசுந்தர். இவர் மீது ஆள் கடத்தல், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், அஜய்கோபிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து பாளை. போலீசார் வழக்குபதிவு செய்து அஜய்கோபியை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளைசுந்தரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவர், நெல்லை நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி சரண் அடைய வந்த போது போலீசார் அவரை கைது செய்ய காத்திருந்ததால் தப்பிச் சென்றார். இந்நிலையில் தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கர்க் ஆலோசனைப்படி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வெள்ளை சுந்தரை மும்பை, டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். அவரது செல்போனையும் கண்காணித்து வந்தனர். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து கோவாவில் பணம் எடுத்த குறுந்தகவல் மாநகர போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார், கோவாவில் வெள்ளை சுந்தர் பதுங்கியிருந்த இடத்தை கண்டறிந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். நெல்லை போலீஸ் கைது செய்ய வருவதை அறிந்த ரவுடி வெள்ளை சுந்தர், விமானம் மூலம் டெல்லிக்கு தப்பி சென்றார். இதையடுத்து தென்மண்டல ஐஜி ஆஸ்ராகர்க், டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வெள்ளை சுந்தரை விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்ய கேட்டுக் கொண்டார். அதன்படி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வெள்ளை சுந்தரை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நெல்லையில் இருந்து சென்ற தனிப்படையினரிடம் டெல்லி போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் டெல்லி கோர்ட்டில் ரவுடி வெள்ளை சுந்தரை ஆஜர்படுத்தி தனிப்படை போலீசார் நெல்லைக்கு அழைத்து வருகின்றனர்.

The post துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு டெல்லி விமான நிலையத்தில் ரவுடி வெள்ளைசுந்தர் கைது: வங்கி கணக்கு மூலம் பிடித்தது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Rowdy Validasunder ,Delhi airport ,Nellie ,rowdy Vella Sundar ,force ,Nellai ,Rowdy Velasundar ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...