×

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரின் மனைவி, மகன் ரூ.6.85 கோடி சேர்த்ததாக வழக்கு: கைது செய்ய லஞ்ச ஒழிப்புதுறை முடிவு

சென்னை: தற்கொலை செய்து கொண்ட, மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் மகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம், 2018ம் ஆண்டு வனத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். வெங்கடாசலம் தனது பணிக்காலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சந்தன மரத்தால் ஆன கட்டில் செய்து கொடுத்துள்ளார். அதற்காக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால், வெங்கடாசலம் கடந்த 2018ம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும் 2019ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பதவி காலத்தில் வெங்கடாசலம் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில், வெங்கடாசலத்துக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடம் இருந்து பல கோடியிலான சொத்து, ஆவணங்கள் சிக்கின. இது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடாசலத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வெங்கடாசலம், மனைவி வசந்தி பெயரில் கிருஷ்ணகிரி காவேரிபட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் பகுதியில் ரூ.9,72,258 மதிப்பில் 3003 சதுரடி நிலம், மகன் விக்ரம் பெயரில் மரக்காணம் அருகே ரூ.20.88 லட்சத்துக்கு 9600 சதுரடி நிலம், அதேபகுதியில் 31.32 லட்சத்தில் 14,400 சதுரடி நிலம், நெற்குன்றம் பகுதியில் உன்ன அடுக்குமாடி குடியிப்பில் 11 மாடியில் மனைவி வசந்தி பெயரில் ரூ.85.46 லட்சத்திற்கு வீடு, சேலம் அம்மாபாளையம் கிராமத்தில் மகன் விக்ரம் பெயரில் ரூ.28.13 லட்சத்தில் விவசாய நிலம், திருப்பத்தூர் மாவட்டம் மஞ்சங்கொல்லைப்புத்தூர் பகுதியில் மனைவி வசந்தி பெயரில் ரூ.18.43 லட்சத்திற்கு 2700 சதுரடி நிலம் என மொத்தம் குறிப்பாக 2013 மற்றும் 2018ம் ஆண்டு காலத்தில் மட்டும் மனைவி, மகன் பெயர்களில் மொத்தம் 9 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 527 ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது.

மேலும், கடந்த 1.4.2013ம் அண்டு காலத்தில் வெங்கடாசலத்தின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 57 லட்சத்து 63 ஆயிரத்து 903 ரூபாய்க்கான சொத்துக்கள் மட்டும் இருந்தது. ஆனால் 1.4.2013 மற்றும் 30.9.2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் வெங்கடாசலத்தின் சொத்து மதிப்பு 220 சதவீதம் உயர்ந்து 8 கோடியே 54 லட்சத்து ஆயிரத்து 624 ரூபாய் உயர்ந்துள்ளது. அதில், அவரது வருமானம் குடும்ப வருமான என 1 கோடியே 68 லட்சத்து 63 ஆயிரத்து 948 ரூபாய்க்கு மட்டும் அவரிடம் கணக்குகள் சரியாக உள்ளது. ஆனால் 6 கோடியே 85 லட்சத்து 37 ஆயிரத்து 676 கோடிக்கு கணக்குகள் அவரிடம் இல்லை. எனவே ரூ.6.85 கோடி பணத்தை வெங்கடாசலம் தனது பணிக்காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி பெற்றது என சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அனிதா, தற்கொலை ெசய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் முதல் குற்றவாளியாகவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி வசந்தி, 3வது குற்றவாளியாக அவரது மகன் விக்ரம் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட வெங்கடாசலம் மனைவி வசந்தி, அவரது மகன் விக்ரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளனர். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்ந்த ரூ.6.85 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரின் மனைவி, மகன் ரூ.6.85 கோடி சேர்த்ததாக வழக்கு: கைது செய்ய லஞ்ச ஒழிப்புதுறை முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Anti-Corruption Bureau ,Chennai ,Pollution Control Board ,Venkatachalam ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...