×

ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளுக்கு நோட்டீஸ்: பொதுமக்களிடையே பரபரப்பு: வட்டாட்சியரிடம் மனு

கும்மிடிப்பூண்டி: ரயில்வே நிர்வாகம் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து கரிமேடு பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் ராமஞ்சேரி கண்டிகை, கரும்புகுப்பம், புதுகும்மிடிப்பூண்டி, காளத்தி தெரு, பாலயோகிநகர், பாலகிருஷ்ணாபுரம், கரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கரிமேடு பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு உட்பட்ட நிலங்களில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் 136 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் ஒட்டி கரிமேடு பகுதி உள்ளது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே கட்டுமான பொறியாளர் வித்யா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, ரயில்வே அதிகாரிகள் தனி பெட்டிகள் கொண்ட ரயிலின் மூலம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் முழுவதும் மார்ச் 26 தேதி ஆய்வு செய்தனர். நான்கு பிளாட்பாரம் கொண்ட இந்த ரயில் நிலையம் இருபுறம் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களை, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பகுதியில், ரயில் நிலையங்களை அமிர்த பாரத் ரயிலின் திட்டத்தின் மூலம் 15 ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், சென்னை பார்க், திருவள்ளூர், பெரம்பூர், சூளூர்பேட்டை, புனித தோமையார் மலை, மாம்பலம், திருத்தணி, கிண்டி, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம், ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தோம். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எக்ஸ் லேட்டர், லிஃப்ட், பார்க்கிங் வசதி, சாலை, கழிப்பறை, புக்கிங் சென்டர், தானியங்கி டிக்கெட் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும். தற்போது கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.13 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரயில் நிலையம் முழுவதும் மிக விரைவில் குற்றசம்பவங்கள் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து கரிமேடு, பைபாஸ் பகுதியில் உள்ள கடை மற்றும் கோயில், தேவாலயங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் நேற்று காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.இதனால் பரபரப்படைந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரித்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கரிமேடு பகுதியில் ஏழை, எளிய மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றோம். தற்போது, ரயில்வே நிர்வாகம் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதற்கு, மாற்றாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியிலேயே அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. மேற்கண்ட இடத்தை நில வகைப்பாடு மாற்றி இந்த பொது மக்களுக்கு வழங்க வேண்டும். தற்பொழுது ரயில்வே நிர்வாகம் குடியிருப்பு காலி செய்ய கால அவகாசமும் வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பதிலளிக்கையில், இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

The post ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளுக்கு நோட்டீஸ்: பொதுமக்களிடையே பரபரப்பு: வட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Karimedu ,Railway Administration ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...