×

பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக நூலகம் கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நூலகத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் வட்டார வளர்ச்சி வளாகத்தில் ஊர்புற நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதுமட்டுமின்றி தினமும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பலர் இந்த நூலகம் வந்து செய்தி மற்றும் மாத இதழ்களை படிக்கின்றனர். இந்த நூலக கட்டிடமானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில் இந்த நூகல கட்டிடம் பழுதாகி சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து புத்தகங்கள் நனைகிறது. மேலும் புத்தகங்கள் அடுக்க கூடுதல் ரேக்குகள் இல்லை. அதனால், அவ்வப்போது இந்த நூலகத்திற்கு வரும் புதிய புத்தகங்களை அடுக்கி வைக்க இடமின்றி மேஜை மற்றும் தரையில் வைக்கும் அவலம் உள்ளது.

இதனால், வாசகர்கள் தாங்கள் தேடி வரும் புத்தகங்களை கண்டு பிடித்து எடுப்பதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இது ஒருபுறமிருக்க, நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க போதிய இடமும் இருக்கைகளும் இல்லை. பழுதாகி அடிப்படை வசதி இல்லாத இந்த நூலகத்தை இடித்துவிட்டு புதிய நூலகம் கட்டித்தரவேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, வாசகர்கள் நலன் கருதி பழமையான இந்த நூலகத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக நூலகம் கட்டித்தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Deutur ,Sitamur Local Development Office ,
× RELATED லே அவுட் அனுமதிக்கு லஞ்சம்: நாம்...