×

மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லை டெல்டாவில் 2.50 லட்சம் ஏக்கரில் கைவிடப்படும் குறுவை சாகுபடி

*இந்தாண்டு நெல் உற்பத்தி குறையும்

தஞ்சை : மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி கைவிடப்படும் நிலையில் உள்ளது. இதனால் நெல் உற்பத்தி குறையும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுகை, திருச்சி மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடி மட்டும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 47 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 16.521 டி.எம்.சி. நீர்வரத்து 575 கன அடி‌. கடந்தாண்டு இதே நாளில் அணையில் 103 அடி நீர் மட்டம் இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி.இதற்கிடையே டெல்டாவில் பம்புசெட் மூலம் தற்போது 50 சதவீத முன்பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அதாவது 2.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15ம் தேதி திறக்க மூத்த வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் வழக்கமான சாகுபடியை மேற்கொள்வது அர்த்தமற்றது. எனவே நேரடி விதைப்பைத் தேர்வு செய்பவர்கள் முன்கூட்டியே சம்பா சாகுபடிக்கு செல்லலாம். இந்த ஆண்டு ஒற்றைப் பயிர் சாகுபடி செய்து, மீதமுள்ள குறுவை சாகுபடியை சம்பா பருவத்தில் ஈடுகட்டலாம் என வேளாண் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், தென் மேற்கு பருவ மழை கேரளாவில் வரும் 31ம் தேதி துவங்கும என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கர்நாடகாவிலும் மழைப்பொழிவு இருக்கும். இதன்பின் மேட்டூருக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் ஆற்றுப்பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலாது. இதைத்தான் வேளாண் நிபுணர் குழுவும் பரிந்துரைத்துள்ளது. ஆகஸ்டில் மேட்டூரில் தண்ணீர் திறக்கும் பட்சத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி தான் மேற்கொள்ளப்படும். சம்பா அறுவடை டிசம்பரில் தான் தொடங்கும்.
எனவே இந்த ஆண்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்ப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாட முடியாமல் பாதிக்கப்படுவார்கள். நெல் உற்பத்தியும் குறைந்து விடும்.

எனவே, தமிழக அரசு குறுவை சாகுபடி மேற்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முறைப்படி அறிவிக்க வேண்டும். குறுவை கைவிடப்படும் பட்சத்தில் இயற்கை பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்குவதையும் அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் பயிர் சாகுபடி முறையை மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லை டெல்டாவில் 2.50 லட்சம் ஏக்கரில் கைவிடப்படும் குறுவை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Thanjavur ,Delta ,Dinakaran ,
× RELATED தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள்...