×

திறப்பு விழாவுக்கு முன்பே பாழாகும் பறக்கும் ரயில் நிலையம்: குடிமகன்கள் கூடாரமானது

ஆலந்தூர்: புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலைய கட்டிடம் திறப்பு விழாவுக்கு முன்பே, பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. சென்னை கடற்கரையில் இருந்து – வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. 5 கிலோ மீட்டர் தூரத்தில் இதற்காக 167 தூண்களுடன் மேம்பால பணி தொடங்கியது. இதில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த ஆட்சியாளர்கள் மேம்பால பணியை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை சில மாதங்களுக்கு முன் பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜூன் மாதத்தில் பறக்கும் ரயில் பணி தொடங்கும் என உறுதி அளித்திருந்தார். தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தில் பூங்கா மற்றும் தூண்களில் பாரம்பரிய பழங்கால ஒவியங்கள் வரையப்பட்டு புதிய பொலிவுடன் காணப்படுகிறது.
இப்படி ஒருபுறம் பணிகள் நடக்க, மறுபுறம் இங்கு கட்டப்பட்ட புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையம் முறையான பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. இங்கு குடிமகன்கள் மது அருந்துவது, சீட்டு ஆடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதுடன், காலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசி செல்வதால் தரை தளம், படிக்கட்டுகள், இருக்கைகள் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

மேலும், புதியதாக அமைக்கப்பட்ட இந்த ரயில்நிலையத்திற்கு ஷட்டர் இருந்தும் இதனை திறந்து வைத்து அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது விந்தையாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலைய கட்டிடம் திறப்பு விழா நடக்கும் முன்பே பாழாகி வருவது தெரிந்தும் ரயில்வே அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்படும் இதுபோன்ற கட்டிடங்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post திறப்பு விழாவுக்கு முன்பே பாழாகும் பறக்கும் ரயில் நிலையம்: குடிமகன்கள் கூடாரமானது appeared first on Dinakaran.

Tags : ALANTHUR ,Chennai ,Dinakaran ,
× RELATED கட்டிட அனுமதி மீறியதாக கூறி அதிமுக...