×

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் அரசு அலுவலகத்துக்கு மக்கள் வராமல் பணி நடக்கும்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கடையநல்லூர் கிருஷ்ண முரளி(அதிமுக) பேசுகையில் ‘கடையநல்லூரில் சார்நிலை கருவூலம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘கடையநல்லூரில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக கருவூல கணக்கு ஆணையரகத்திடமிருந்து கருத்து வரப்பெற்று அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.
கிருஷ்ண முரளி: வெகு விரைவாக சார்நிலை கருவூலம் அமைத்து தந்து வழிவகை செய்து தர வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: நிதிநிலை அறிக்கைக்கான மானிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கும் போது அறிவிப்புகள் இன்னும் பல வர இருக்கின்றன. எந்த அளவிற்கு ஆட்டோமேஷன், ஆன்லைன், மொபைல் ஆப் எல்லாவற்றிலும் அரசை நேரடியாக மக்களும், பல அலுவலர்களும் பணிக்கு நேரில் வராமலே செய்து கொள்ள முடியும். ஏற்கனவே அறிவித்ததற்கு மேல் இன்னும் சில மாற்றங்களை செய்து வருகிறோம். எனவே, புது மாடல் உருவாக்கிய பிறகு சார்நிலை கருவூலங்கள் எங்கு எல்லாம் கூடுதலாக உள்ளதோ. எங்கு எல்லாம் குறைவாக உள்ளதோ, அதை கண்டறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

 • அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பதில் சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்க நடவடிக்கை
  சட்டப்பேரவையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்(திமுக) பேசுகையில், ‘‘திரைப்படக் கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தகவல் தெரிவிக்க அரசு முன்வருமா. கலைஞர் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே, அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும்’’ என்றார்.
  இதற்கு பதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசுகையில் ‘‘2009 முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்படாமல் இருந்த விருதுகள், கடந்த செப்டம்பர் 4ம் தேதி 314 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016 முதல் 2022 ஆண்டு வரையிலான விருதாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
  எழிலரசன்(திமுக எம்எல்ஏ): திரைப்பட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது போல பல்வேறு சமூக சிந்தனைகளை விதைத்து வரும் குறும்படங்களுக்கும் அரசு விருது வழங்க வேண்டும்.
  அமைச்சர் சாமிநாதன்: எழிலரசன் வழங்கிய ஆலோசனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று குறும்படங்களுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
 • அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் டிஜிட்டல் நூலகம்
  பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் (அதிமுக) பேசுகையில், “ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சியில் கிளை நூலகம் அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
  இதற்கு பதில் அளித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக தான் முதல்வர் மக்கள் வாசிப்பு இயக்கத்தை ஆரம்பித்து ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். கிளை நூலகங்களை மேம்படுத்துவதற்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில், உறுப்பினர்களும் தொகுதியில் வாசிப்பு பழக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் கிளை நூலகங்களுக்கு 600 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
  தொடர்ந்து திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் டிஜிட்டல் நூலகம் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதே போல அனைத்து நூலகங்களிலும் டிஜிட்டல் நூலகம் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “எம்எல்ஏக்கள் அலுவலகங்களில் டிஜிட்டல் நூலகம் வசதி குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். 500 நூலகங்களில் டிஜிட்டல் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள நூலகங்களில் படிப்படியாக கொண்டுவரப்படும்” என்றார்.
 • கையில் குத்திய ஊசியுடன் பேரவைக்கு வந்த பெண் அமைச்சர்
  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கடந்த 11ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அமைச்சர் கயல்விழி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, குளுக்கோஸ் ஏற்றுவதற்காக இடதுகை மணிக்கட்டில் குத்திய ஊசியுடன் அவர் அவை நடவடிக்கையில் பங்கேற்றார்.
  அதேபோல், நிலக்கோட்டை தேன்மொழி (அதிமுக) நீண்ட நாட்களாக சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவரும் நேற்று சட்டப்பேரவைக்கு வந்து இருந்தார். அவர், வலது கையில் கட்டுப்போட்டு இருந்தார்.

The post அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் அரசு அலுவலகத்துக்கு மக்கள் வராமல் பணி நடக்கும் appeared first on Dinakaran.

Tags : Minister B. TD R.R. Pranivel Thiagarajan ,Government Office of Information ,Krishna Murali ,Kadyanamakha ,Kadaikanallur ,Minister B. TD R.R. Pranivel Thyagarajan ,
× RELATED கப்ஜா’ நடிகருக்கு 3வது முறையாக கொரோனா பாதிப்பு