×

அச்சிடும் செலவை குறைக்க முத்திரை தாள் மதிப்பு அதிகரிப்பு: சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார் அமைச்சர் மூர்த்தி

சென்னை: முத்திரை தாள் அச்சிடும் செலவை குறைப்பதற்காக, தமிழகத்தில் முத்திரை தாள் மதிப்பை அதிகரித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேற்று ஒரு சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: இந்திய முத்திரை சட்டம் (1899ம் ஆண்டு) தமிழகத்துக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்து கொள்வதற்கான சட்ட முன்வடிவு இது. இந்த சட்டம், இந்திய முத்திரை (தமிழ்நாடு திருத்தம்) சட்டம்-2023ம் ஆண்டு என்று அழைக்கப்படும். இந்திய முத்திரை சட்டத்தின்படி, ஆவணங்களுக்கான முத்திரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில ஆவணங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பீட்டின் அடிப்படையிலும், சில ஆவணங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதன் அடிப்படையிலும் முத்திரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், 2001-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை வீதம் மாற்றி அமைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் நீதித்துறை அல்லாத முத்திரை தாள்களை அச்சிடுவதற்காக செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. எனவே, இந்திய முத்திரை சட்டத்தில் உள்ள கட்டணம் தொடர்பான பட்டியலை திருத்தி, சில ஆவணங்களுக்கான முத்திரை தீர்வையின் வீதத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

அந்த வகையில், முத்திரைச் சட்டத்தின் 3-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள கட்டணம் ரூ.100 என்பது ரூ.1000 என்று மாற்றப்படுகிறது. 4 மற்றும் 5-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ரூ.20 என்ற முத்திரை கட்டணம் ரூ.200 ஆக மாற்றப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் சங்க அமைப்பு விதிகள் தொடர்பான பிரிவில் கூறப்பட்டுள்ள, பங்கு முதலீட்டின் ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்ற முத்திரை கட்டணம், ரூ.5 லட்சத்துக்கும் ரூ.500 என்று மாற்றப்படுகிறது. வேறு பிரிவில் கூறப்பட்டுள்ள ரூ.50 என்பது ஆயிரம் ரூபாய் என்றும், ரூ.5 என்பது ரூ.100 என்றும், ரூ.20 என்பது ரூ.500 என்றும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த சட்டமசோதாவை ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் எதிர்ப்பதாக உறுப்பினர் நாகைமாலி கூறினார்.

The post அச்சிடும் செலவை குறைக்க முத்திரை தாள் மதிப்பு அதிகரிப்பு: சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார் அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,Minister Murthy ,Legislative Assembly ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்