×

அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானை சிக்கியது: விவசாயிகள் நிம்மதி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த காட்டு யானை 2 விவசாயிகளை மிதித்து கொன்றதோடு, பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வனத்துறையினர் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க முயற்சி செய்து வந்தனர். இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 முறை கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்தும் கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது.

பல்வேறு முயற்சி மேற்கொண்டும் கருப்பன் யானை சிக்காமல் போக்கு காட்டியது. மூன்று முறை யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், 4வது முறையாக நேற்று பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கருப்பன் யானை நடமாடத்தை கண்காணித்து வந்தனர். இதற்கு இடையே நேற்று இரவு தாளவாடி அருகே உள்ள மகாராஜன்புரம் பகுதியில் விவசாயி மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் கருப்பன் யானை நடமாடியதை வனத்துறையினர் அறிந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து இன்று (திங்கள்) அதிகாலை சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி ஒசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து கருப்பன் யானை பாதி மயக்க நிலைக்கு வந்து கரும்பு தோட்டத்தில் நகராமல் நின்றது. இதையடுத்து தற்போது 2 கும்கி யானைகளை பயன்படுத்தி இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கருப்பன் யானையை லாரியில் ஏற்றினர்.

பிடிக்கப்பட்ட யானையை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கவில்லை. தற்போது வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால், தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

The post அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானை சிக்கியது: விவசாயிகள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Atacasam ,Sathyamangalam ,Erode district ,Thalawadi ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது