×

சில நாட்களுக்கு முன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகனை புதைத்த இடத்தில் தந்தை, சித்தப்பாவின் உடலடக்கம்: நீதித்துறை ஆணைய விசாரணைக்கு உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் மனு

பிரயாக்ராஜ்: கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது தந்தை மற்றும் சித்தப்பாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதித்துறை ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் போலீஸ் காவலில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாபியா கும்பல் தலைவரும், முன்னாள் எம்பியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அசிம் என்ற அஷ்ரப் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரையும் சுட்டுக் கொன்ற 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதிக் அகமது மற்றும் காலித் அசிமின் உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, நேற்று மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றிரவு இருவரது உடல்களும் உள்ளூர் மயானத்தில் புதைக்கப்பட்டன.

முன்னதாக கடந்த 13ம் தேதி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிக் அகமதுவின் மகனான ஆசாத்தின் உடல் புதைக்கப்பட்ட அதே இடத்தில் தந்தை, சித்தப்பாவின் உடல்கள் புதைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆதிக் குடும்பத்தின் தூரத்து உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் ஆதிக்கின் மனைவி ஷைஸ்தா பர்வீன் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் அவரது மகன்கள் எஹ்சான் மற்றும் அபான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்கண்ட கொலை குறித்து விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரவிந்த் குமார் திரிபாதி தலைமையில் நீதித்துறை ஆணையத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் சுரேஷ் குமார் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் சோனி ஆகியோர் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய மூன்று பேரும் (லவ்லேஷ் திவாரி, மோஹித் என்ற சன்னி மற்றும் அருண் மவுரியா) ஆதிக் மற்றும் அஷ்ரப் கும்பலை ஒழிப்பதன் மூலம் மாநிலத்தில் தாங்கள் பிரபலமடைய முடியும் என்ற நோக்கில் சுட்டுக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதிக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஷாகஞ்ச் பகுதியில் உள்ள மோதிலால் நேரு பிராந்திய மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் ஊடகவியலாளர்கள் குழு பாதுகாப்பு வளையத்தை மீறிச் சென்றது. ஆதிக் மற்றும் அஷ்ரப் இருவரும் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது, வீடியோ கேமராக்கள், மைக் மற்றும் ஊடகவியலாளரின் அடையாள அட்டையுடன் வந்த மூன்று பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தி ஆதிக், அஷ்ரப் ஆகியோரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்தின் போது சில ஊடகவியலாளர்களும், மான் சிங் என்ற போலீஸ்காரரும் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சன்னி என்பவர் மீது கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 30 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லவ்லேஷ் திவாரி மீது கள்ளச்சாராயம் விற்றது, தாக்கியது, மானபங்கப்படுத்துதல், ஐடி சட்ட வழக்குகள் உள்ளன. அருண்குமார் மவுரியாவின் குற்றப்பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூவரிடமிருந்தும் கைத்துப்பாக்கி, கிர்சன் கைத்துப்பாக்கி (துருக்கியில் தயாரிக்கப்பட்டது), ஜிகானா கைத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. எம்எல்ஏ கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில், ஆதிக், அவரது சகோதரர் அஷ்ரப் மற்றும் மகன் ஆசாத் உட்பட ஆறு பேர் என்கவுன்டர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலீஸ் காவலின் போது ஆதிக் மற்றும் அஷ்ரப் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் உத்தரபிரதேசத்தில் என்கவுன்டரில் 183 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2020 விகாஸ் துபே என்கவுன்டர் வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

யாருக்கு என்ன லாபம்?: ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோரின் படுகொலை சம்பவம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள எந்தவொரு நபரின் மரணமும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், மாநில காவல்துறையின் செயல்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோரை சுட்டுக் கொன்ற நபர்கள், எதற்காக அவர்களை கொன்றார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இவர்கள் இருவரையும் கொன்றதற்கான நோக்கம் என்ன? கொலைக்கு பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? இப்படி பல கேள்விகள் தொடர்கின்றன. இதற்கான பதில்கள் யாவும், கொலையாளிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் விசாரணையில் தெரியவரும். ஆதிக் மற்றும் அஷ்ரப் கொலையால் யாருக்கு என்ன லாபம்? அல்லது இருவரும் உயிரோடு இருப்பதால் யாருக்கு பாதிப்பு? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இருவரையும் சுட்டுக் கொல்வதால் தாங்கள் பிரபலமாக முடியும் என்று கைதான 3 குற்றவாளிகளும் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறுகின்றனர். 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மூலம், பஞ்சாப் எல்லை வழியாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆதிக்-அஷ்ரப் மரணத்தில் நிறைய ரகசியங்கள் இருப்பதாக எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஊடகவியலாளர்கள் நுழைய தடை: ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்து நிலைமைகளை கவனித்து வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள காளிதாஸ் மார்க்கில் ஊடகவியலாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களின் வீடுகளும் இப்பகுதியில் உள்ளதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இல்லங்களுக்கு ஊடகவியலாளர்கள் வந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆதிக் அகமது, அஷ்ரப் ஆகியோரை சுட்டுக் கொன்ற மூவரும், மின்னணு ஊடக நிருபர்களாக காட்டிக் கொண்டும், வீடியோ கேமரா மற்றும் மைக்ரோஃபோனை வைத்துக் கொண்டும் தாக்குதல் நடத்தியதால், மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் முன்னெச்சரிக்ைக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

The post சில நாட்களுக்கு முன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகனை புதைத்த இடத்தில் தந்தை, சித்தப்பாவின் உடலடக்கம்: நீதித்துறை ஆணைய விசாரணைக்கு உத்தரவு; சுப்ரீம் கோர்ட்டில் மனு appeared first on Dinakaran.

Tags : Siddappa ,Judicial Commission ,Supreme Court ,Prayagraj ,Sidappa ,Dinakaran ,
× RELATED மீஞ்சூரில் வாலிபர் கொலையான...