×

காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் இன்று ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

பெங்களூரு: கர்நாடக மாநில பாஜ முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். அவரது குடும்பம் சங் பரிவார் அமைப்பில் இணைந்து செயல்பட்டது. அவரது மூத்த சகோதரர் ஜனசங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்ட பேரவை உறுப்பினர். ஷெட்டரும் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது ஏபிவிபி மாணவர் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். பின் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றார்.

கடந்த 1980ம் ஆண்டுகளில் வட கர்நாடக பகுதியில் பாரதிய ஜனதா கட்சியைச் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உழைத்தார். கடந்த 1990ல் ஹுப்பள்ளி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1994ம் ஆண்டு ஹுப்பள்ளி-தார்வார் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஹுப்பள்ளி ஊரக தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவையில் கால் பதித்தார். கடந்த 1999, 2004, 2008, 2013, 2018 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு முதல்வராக பதவியேற்று ஓராண்டு காலம் இருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜ சார்பில் 7வது முறையாக போட்டியிட விரும்பி விண்ணப்பித்தார். ஆனால் பாஜ தலைமை வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தது. பாஜ வெளியிட்ட இரண்டு வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையில் தேர்தல் அரசியலில் இருந்து விலகும்படி பாஜ தலைமை வலியுறுத்தியது. அதை ஏற்க மறுத்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று தேசிய பாஜ தலைவர் ஜே. பி. நட்டாவை நேரில் சந்தித்து தனது நிலையை உறுதி செய்தார். வரும் தேர்தலில் பாஜ சார்பில் சீட் வழங்கவில்லை என்றாலும் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை வட கனரா மாவட்டம், சிர்சியில் உள்ள சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி வீட்டிற்கு நேரில் சென்று பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அதை பெற்று கொண்ட சபாநாயகர் சட்டப்படி முடிவு செய்வதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகி கொள்வதாக கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் நளின்குமார்கட்டீலுக்கு கடிதம் அனுப்பினார். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் ஹுப்பள்ளியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த ஷெட்டர், முன்னாள் அமைச்சர் சாமனூர் சிவசங்கரப்பாவின் பண்ணை தோட்டம் சென்றார். நேற்று இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12.45 மணி வரை காங்கிரஸ் மேலிட பொறுப்பார் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி. கே. சிவகுமார், எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள் எம். பி. பாட்டீல், ஈஸ்வர் கண்ட்ரே ஆகியோர் ஷெட்டரிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் என்னென்ன முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை உறுதி செய்தனர்.

அதே சமயத்தில் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள மாநில பாஜ அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்வர் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட கட்சி முன்னணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஷெட்டர் உள்பட கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்தவர்களை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக விவாதித்தனர்.

இந்நிலையில் பாஜவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர், இன்று பெங்களூரில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்பட பலர் உடனிருந்தனர். ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் இன்று ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Jekadish Shetter ,Congress party ,Congress ,Karke ,Bengaluru ,Karnataka ,State Baja ,National Leader ,Malligarjune Karke ,Jekadesh Shetter ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...