×

ஆந்திரா ரக ரோஜா மலர் திருவண்ணாமலையில் சாகுபடி : கிலோ ₹250க்கு விற்பனை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா மலைமஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல்(50) விவசாயி. இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வீரிய வெள்ளரிக்காய், வேர்க்கடலை, மிளகாய், மல்லி, முல்லை, பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா போன்றவற்றை பயிர் செய்து விவசாயத்தையே நம்பி வாழ்ந்துவருகிறார்.அதிகளவில் மலர்சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி ஆனந்தவேல், அதிலும் குறிப்பாக ரோஜா மலர் சாகுபடி அதிகளவு செய்து வருகிறார். ரோஜாப் பூ சாகுபடி குறித்து விவசாயி கூறுகையில், அறுவடை முடிந்த நிலத்தில் மாட்டு சாணம் எரு கொட்டி 3 முறை ஏர் உழ வேண்டும். தை மாதத்தில் ஒரு அடிக்கு ஒரு அடி பள்ளம் தோண்டி, 4 அடிக்கு ஒரு கால் ஓட்ட வேண்டும்.

ஆந்திரா ரகம் கொண்ட ரோஜாப் பூ செடி ₹20 ரூபாய்க்கு வாங்கி வந்து நடவு செய்கிறேன். இந்த ரகத்தினை நடவு செய்தால் 5 ஆண்டுகள் வரையில் பராமரித்தால் நல்ல சாகுபடி கிடைக்கும். ரோஜா செடிகள் வளர்ந்த பின்னர் செடிக்கு அருகில் உள்ள புற் பூண்டுகளை களையெடுப்பது மிக முக்கியமானது. பத்து நாட்களுக்கு ஒரு முறை இயற்கை உரமான டிஏபியை ஒரு செடிக்கு 100 கிராம் இட வேண்டும். செடிகளில் உள்ள இலைகளில் புழுக்கள் இருந்தால் புழுக்களை கட்டுப்படுத்த லோ,லோ, டோஸ் ஒரு லிட்டருக்கு 8 எம்எல், 10 லிட்டருக்கு 80 எம்எல் மருந்து கலந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை இடைவெளிவிட்டு அடிக்க வேண்டும்.

அதற்குப் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து இலைச் சத்து மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 5 எம்எல், 10 லிட்டர் தண்ணீர் 50 எம்எல் கலந்து தெளிக்க வேண்டும். துளிர்விடும் கொழுந்துகளை தை, மாசி, பங்குனி ஆகிய 3 மாதங்கள் வரை கிள்ளிவிட வேண்டும். 3 மாதங்கள் கழித்து பக்கவாட்டில் உள்ள கிளைகளில் இருந்து புதியதாக மொட்டு விட ஆரம்பிக்கும். 7வது மாதத்தில் 15 கிலோ பூ வரும். அதிலிருந்து படிப்படியாக பூக்கள் கிலோ அளவு அதிகரிக்கத் தொடங்கும்.திருவண்ணாமலை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ ₹150 முதல் விசேஷ நாட்களில் ₹600 வரை அதிக விலை விற்பனையாகும். சாதாரண நாட்களில் ஒரு கிலோ ₹100 வரை விற்பனை செய்யப்படும். பூ வரும் பொழுது மீன் இரண்டு கிலோ, நாட்டு சர்க்கரை இரண்டு கிலோ வாழைப்பழம் இரண்டு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் 28 நாட்களுக்கு கலந்து மூடி வைக்க வேண்டும். அதன்பின்னர் கறுப்பு நிறமாக நொதித்தல் வடிவில் வெளியே வரக்கூடிய தண்ணீரை எடுத்து அதனை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 5 எம்எல் கலந்து பூச்செடி வளர்ச்சிக்காக தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குறைந்தது 35 கிலோ வரை பூ சாகுபடியாகும்.

3 மாதத்தில் 65 ஆயிரம் வரையில் லாபம் கிடைக்கும். பன்னீர் ரோஜா செடிகள் ஐந்து ஆண்டுகள் வரை நன்கு பராமரித்தால் அதிலும் நல்ல சாகுபடி கிடைக்கும். திருவண்ணாமலைச் சந்தைக்கு தினமும் 15 கிலோ ரோஜாப் பூக்களை விற்பனைக்காக அனுப்பி வைக்கிறேன். மீதமுள்ள 5 கிலோ பூக்களை நானே நேரடியாக சைக்கிளில் சென்று சுற்றுப்புறக் கிராமங்களில் விற்பனை செய்கிறேன்.கிலோ ₹250 வரையில் விற்பனை செய்கிறேன். இதனால் மற்ற விவசாயிகளை விட எனக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனது மனைவி, மகன், மருமகள் என்று குடும்பத்தினருடன் சேர்ந்து விவசாயம் செய்வதால் கூலி ஆட்கள் செலவும் சற்று குறைகிறது. நிறைவான லாபத்துடன் விவசாயம் செய்து வருகிேறாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திரா ரக ரோஜா மலர் திருவண்ணாமலையில் சாகுபடி : கிலோ ₹250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tiruvanna Namalaya ,Anandavel ,Mallapuram ,Thiruvannamalai district ,Dandaramputtu ,Thiruvanna Malay ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...