×

திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் பரிசுகளை அள்ளிய வீரர்கள்

திருவாடானை, ஏப்.17: திருவாடானை அருகே உள்ள பாகனூர் ஊராட்சி, இளஞ்சியமங்கலம் கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கிராம பொதுமக்கள் சார்பில், வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு வடமாடு நலச்சங்க விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 காளைகளுக்கு சுமார் 25 நிமிட நேரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டன. இந்த காளைகளை அடக்குவதற்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்களில் ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் வீதம் 15 குழுக்களாக களம் இறக்கப்பட்டனர்.

களத்தில் காளைகளை அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்க தவறினால், பிடிபடாத காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு, இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகையான தலா ரூ.7ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவை கண்டுகளித்தனர்.

The post திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் பரிசுகளை அள்ளிய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Manjuvirat ,Thiruvadanai ,Tamil New Year ,Ilanjiamangalam ,Baganur Panchayat ,
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு