
கொல்கத்தா: கடும் வெயில் காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒருவாரம் விடுமுறை விடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த சில தினங்களுக்கு வெப்பஅலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை விடுமுறை அளித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “கடந்த சில தினங்களாக பள்ளியில் இருந்து திரும்பிய குழந்தைகள் கடும் தலைவலி உள்ளிட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. கடும் வெப்பஅலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதையும் மனதில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கும் இன்று முதல் ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வௌியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
The post கடும் வெயில் காரணமாக மேற்குவங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

